கோஹினூரின் கதை

கோஹினூரின் கதை


கோஹினூர் என்பது புகழ் பெற்ற வைரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும் அதுகுறித்த சில சுவையான விபரங்களை இங்கே பார்ப்போம். கோஹ் - இ - நூர் என்றால் ஜோதியின் சிகரம் - Mountain of Light - என்று அர்த்தம். இது அவ்வளவு ஒளி பொருந்திய வைர மணிக்கல். அதற்கு கோஹினூர் என்ற பெயரைச் சூட்டியவர் பெர்ஸிய மன்னர் நாதிர் ஷா. 


சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவிலுள்ள கோல்கொண்டா சுரங்கத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டது இந்த கோஹினூர் வைரம். அச்சமயத்தில் அதுவரை தோண்டி எடுக்கப்பட்ட வைரங்களில் இதுவே உலகின் மிகப்பெரிய வைரமாகும். இதன் எடை 186 கேரட் என்று கூறப்படுகிறது. ஆனால் 105.6 கேரட் தான் இதன் சரியான எடை என்று ஆபரண வல்லுநர்கள் கணிக்கிறார்கள். 


சரித்திரம் அறிந்த வரையில், முதன்முதலில் காக்கட்டீய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களிடம் இந்த வைரம் இருந்ததாகத் தெரிகிறது. இதனை அவர்கள் தங்கள் குலதெய்வமான பத்ரகாளி அன்னையின் இடது கண்ணில் பொருத்தி வைத்திருந்தனர். 


அடுத்து 14 ஆம் நூற்றாண்டில் அலாவுத்தீன் கில்ஜியின் படையெடுப்பில் காக்கட்டீய அரசு வீழ்ந்தது. சாம்ராஜ்யம் கொள்ளையிடப்பட்டது. அதுசமயம் கோஹினூர் வைரம் அவர்கள் வசமானது. பின்னர் அது குவாலியர் மன்னரின் குடும்பத்துக்கு சென்று, ஹுமாயூன் கைக்கு வந்து, பாரசீக மன்னர் தாமஸ்ப் கைக்குப் போய், தட்சிணப் பீடபகுதியை ஆண்ட நிஜாம் ஷாவை அடைந்தது, அதைத் தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் ஷாஜஹான் கைக்குப் போனது. அடுத்து வந்த காலகட்டங்களில் அது பலரின் கைகளுக்கு மாறி மாறி இறுதியாக ஹுமாயூன் அளித்த பரிசாக மாமன்னர் பாபரின் கைக்கு வந்து சேர்ந்தது. 


கி. பி. 1739 ல் மொகலாயப் பேரரசர் முஹம்மது ஷாவை பெர்ஸிய மன்னர் நாதிர் ஷா தோற்கடித்து டெல்லியைக் கைப்பற்றினார். அவர் கோஹினூர் வைரத்தை தன்னோடு எடுத்துச் சென்றார். பின்பு ஒருகட்டத்தில் அது பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்துக்கு வந்து சேர்ந்தது. 


கி. பி. 1849 ல் பஞ்சாப் மாகாணம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆளுகைக்குள் வந்ததன் பின்னர் கோஹினூர் வைரம், சர். ஜான் லாரன்ஸ் என்ற பிரிட்டிஷ் உயர் அதிகாரியின் பாக்கெட்டுக்குப் போனது. அதை அவர் பீரோவில் வைத்ததை மறந்து விட்டார். ஆறு வாரங்களுக்குப் பிறகு ஞாபகம் வந்து அவசர அவசரமாக ஓடோடிச் சென்று பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மஹாராணியாருக்கு அதைப் பரிசாக வழங்கினார். இன்று கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் மகுடத்தில் ஒளி வீசும் ஆபரணமாகப் பொருத்தப்பட்டு டவர் ஆஃப் லண்டனில் கப் சிப்பென்று பாதுகாப்பாக அமர்ந்துள்ளது. 


மேலும் சில விபரங்கள் :


வைரத்தின் மதிப்பை கேரட்டுகளில் மதிப்பிடுகிறார்கள். கேரட் என்பது வைரத்தின் எடையைக் குறிக்குமேயன்றி அதன் உருவ அமைப்பை size ஐக் குறிப்பதாகாது. அதாவது ஒரு கேரட் என்பது 200 மில்லிகிராம் (அல்லது 0.2 கிராம்) எடைக்கு சமமாகும். ஒரு கேரட் எடையுள்ள முழுதான ரவுண்ட் வைரம் ஒன்றின் சராசரி விலை இன்றைய மதிப்பில் 5225 யு. எஸ். டாலர் என்று சொல்கிறார்கள். இது இந்திய மதிப்பில் ரூபாய் 4,61,351 ஆகும். 105.6 கேரட் (அல்லது 22.12 கிராம்) எடை கொண்ட கோஹினூர் வைரத்தின் விலை சுமார் 20 பில்லியன் யு. எஸ். டாலராக மதிப்பிடப்படுகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)

ஆனால் கோஹினூர் வைரத்தை அதன் வரலாற்று, கலாச்சார, புராதன முக்கியத்துவத்தின் அடிப்படையில் மதிப்பிட்டால், அதற்கான உண்மையான விலையை, மதிப்பை யாராலும் நிர்ணயிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. நமது இந்தியா இழந்துள்ள விலைமதிக்க முடியாத சொத்துக்கள் பலவற்றுள் கோஹினூர் வைரமும் ஒன்று. அதை மீட்டெடுக்க நமது அரசும் முயன்று வருகிறது. நெருங்கின பொருள் கைப்படுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 


P. கணபதி

பாளையங்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%