சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்
Jul 26 2025
74

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிர்இழந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “சாத்தான்குளம் வழக்கில் குற்றம் செய்தோருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை தள்ளிவைப்பு: இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதரின் கோரிக்கைக்கு ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் கடும் ஆட்சேபம் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து விசாரணையை ஜூலை 28-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?