மாதர் சங்கத் தலைவி சத்யவதி, சங்கத்தின் செயலாளராக இருக்கும் மல்லிகாவின் வீட்டிற்கு, அடுத்த மாதம் நடைபெற உள்ள மாதர் சங்கத் கூட்டம் சம்பந்தமாக பேச வந்திருந்தாள்.
வீட்டிற்குள் நுழையும் போதே, சத்யவதியை வாயார வரவேற்று ஹாலில் உள்ள சோபாவில் உட்கார வைத்தாள் மல்லிகா .
பிரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து சத்யவதி விடம் கொடுத்தபடியே, அருண் இரண்டு காபி எடுத்துட்டு வா என்றாள்.
சிறிதுநேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒரு சில்வர் தட்டில் இரண்டு டம்ளர் களில் காபியை கொண்டு வந்து வைத்து விட்டு, குட்மார்னிங் ஆன்ட்டி என்றான்.
அந்த இடமே காபியின் வாசனை மணம் பரப்பியது.
காபியை ருசித்த படியே, என்ன மல்லிகா... இன்னைக்கு வேலைக்காரங்க வரலையா?
உன் பையனையே காபி போட வச்சிட்டியே.... என்றாள்.
என் வீட்டுல வேலைக்காரங்களே கிடையாது! வேலைக்காரங்க யாரையும் நான் வச்சுக்கல்ல.... எல்லா வேலைகளையும் நாங்களே செஞ்சிப்போம்... இப்பப்பாரு.... என் பையன்தான உனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தான்.
ஆமாம்... ஆன்ட்டி...! எங்க வீட்டு வேலை எல்லாத்தையும் நாங்க நாலுபேருமே செஞ்சிடுவோம்....
தங்கை இருந்தா அவளே உங்களுக்கு காபி போட்டு கொடுத்திருப்பா... அவ காலேஜ்க்கு போயிருக்கா... எனக்கு இன்னைக்கு லீவு... அதனால அம்மாவுக்கு உதவியா இன்னைக்கு நான் இருப்பேன்.. என்றான் அருண்...
பரவாயில்லையே..
அப்படின்னா வீட்டை பெருக்கறது, பாத்திரங்கள் துலக்கறது இந்த வேலைக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க என்றாள் சத்யவதி...
எங்க வீட்டுக்காரர் ஓய்வா இருந்தாருன்னு வச்சுக்கோ, நேரா கிச்சனுக்குள்ள போயி, கழுவ வேண்டிய பாத்திரங்கள் இருந்தா அவரே சுத்தமா தேய்ச்சு போட்டுடுவாரு.. அதேபோல காய்கறி வெட்டுறது, வாஷிங் மெஷின்ல துணிகளை போடுறது, துணிகளை காயபோடறது அத்தனை வேலைகளையும் பாகுபாடு இல்லாம என் வீட்டுகாரரே செஞ்சிடுவாரு! அவரு இல்லேன்னு வச்சிக்க என் புள்ளைங்க இரண்டு பேரும் செஞ்சிடுவாங்க...
என் பொன்னு ராதா வீட்டுல இருந்தா அவளே சமையலும் செஞ்சிடுவா!
ஆரோக்கியமாவும், சுறுசுறுப்பாவும் இருக்கனும்னா நம்ம வீட்டு வேலைகளை நாமளே செஞ்சா போதும்... நாமும் எப்போதும் சுறுசுறுப்பா இருக்கலாம்.. மனசுக்கும் நிம்மதி கிடைக்கும்...
இது பெண்கள் செய்யிற வேலை, ஆண்கள் செய்யிற வேலைன்னு பிரிச்சு பார்க்காம, வீட்டு வேலைகள் எல்லாத்தையும் நாங்களே செஞ்சி முடிச்சிடுவோம்... யாரையும் எதிர்பார்க்கறது கிடையாது என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்தாள் மல்லிகா...
என் பிள்ளைகள் இரண்டு பேருக்கும், சின்ன வயசுலேருந்தே வீட்டைப் பெருக்கறது, பாத்திரங்கள் தேய்க்கறது, அவரவர் துணிகளை அவங்களே துவைச்சுக்கறது... இப்படியான வீட்டு வேலைகளை நானும் என் வீட்டு காரரும் பசங்களுக்கு சொல்லி கொடுத்ததுனாலே, அவங்களும் அலுப்பில்லாம இப்படியான வேலைகளை தினமும் செஞ்சிட்டு இருக்காங்க!
எனக்கும் சமையல் வேலையில அதிக சுமை இல்லாம இருக்குன்னா நாங்க எல்லாரும் வீட்டு வேலைகளை பகிர்ந்துகிட்டு செய்யறதுதான் காரணம் என்றாள் மல்லிகா...
ஆச்சரியமா இருக்கு மல்லிகா! சிறந்த குடும்பத்துக்கு உதாரணமா உன் குடும்பத்தையே தேர்வு செஞ்சு பரிசு கொடுக்கலாமுன்னு தோணுது... என்றாள் சங்கத்தலைவி சத்யவதி...
மேலும் அடுத்த மாசம் பேசவேண்டிய பேச்சுக்கு தலைப்பு உங்கிட்டே இருந்து எனக்கு கிடைச்சுடுச்சு....
சிறந்த குடும்பம்கிற
தலைப்புல நான் உன் குடும்பத்தைப் பத்தி தான் பேசப்போறேன்... என்று மல்லிகா விடம் கூறிவிட்டு சத்யவதி
விடைபெற்று சென்றாள்....
---------------------------------------
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.