சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் வாக்குச்சாவடி முகவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ‘‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-–
எங்கு சென்றாலும் எஸ்.ஐ.ஆர். பற்றித்தான் பேசிக்கொண்டிருக் கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும், ‘‘நாங்கள் இந்திய குடிமக்கள் தான்’’ என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். காரணம், தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட ஒரு பெரும் சுமையை நம்மீது சுமத்தியிருக்கிறது.மக்களின் வாக்குரிமையே பறிபோகும் அளவிற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இதை உருவாக்கி இருக்கிறார்கள். வழக்கமாகத் தேர்தலில் கட்சியை வெற்றிபெற வைக்கும் பொறுப்பைத்தான் உங்களிடத்தில் ஒப்படைப்பதுண்டு. ஆனால் இந்த முறை, மக்களுடைய வாக்குரிமையைப் பெற்றுதரும் பெரும் பொறுப்பையும் கூடுதலாக உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மிகப்பெரிய போராட்டங்களை நடத்தித் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கேரளாவில் ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் எதிர்க்கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கி றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் அண்ணா தி.மு.க. அதை ஆதரித்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களைச் சந்திக்க அவர்களுக்குத் தெம்பு இல்லை. அதனால்தான் இந்தக் குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள்.
எனவே, இப்படிப்பட்ட நிலையில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும். அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாமெல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நியமித்திருக்கும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே நம்முடைய வாக்குச்சாவடி முகவர்கள் தான் துணை நிற்க வேண்டும். உதவி செய்ய வேண்டும். ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய அனைத்து வகையிலும் நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.