விருதுநகர், அக். 5–
சிவகாசி அருகே பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோனம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசுகளை விற்பனை செய்து கொடிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனைக்கண்ட பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் சென்றனர்.
இதனையடுத்து பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. பின்னர் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பட்டாசு கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு 13-ந்தேதி ஆலோசனை
சென்னை, அக்.5-
தமிழக சட்டசபை வரும் 14-ந் தேதி கூடும் நிலையில் 13-ந் தேதியன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025–-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது.
அதன்பின்னர் மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வருகிற 13-ந் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.
அலுவல் ஆய்வுக்குழு எடுக்கும் முடிவுகளின்படி சட்டசபை கூடும் நாட்கள் நிர்ணயம் செய்யப்படும். 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்ட பிறகு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் இறப்பு குறித்த இரங்கல் குறிப்பு, 14-ந் தேதியன்று அவையில் தெரிவிக்கப்படும். மறைந்த வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மற்றும் சில முக்கிய பிரமுகர்களின் மரணம் குறித்து இரங்கல் தீர்மானமும் அன்று நிறைவேற்றப்படும்.
கடந்த 27-ந் தேதி கரூரில் த.வெ.க. கூட்டத்தில் விஜய் பேசியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் மரணம் தொடர்பான இரங்கல் குறிப்பையும் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார் என்றும், அவர்களுக்கும் சட்டசபையில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரங்கல் நிகழ்ச்சியோடு அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
அதைத்தொடர்ந்து அவை கூடும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய பிரச்சினைகளில் அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய வாய்ப்பு உள்ளது. 2025-–26-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை, சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.