மும்பை,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் ஆக்கியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது.
இந்த தோல்விக்கு தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததே முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் டி20 கிரிக்கெட்டின் வருகையால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டதாக நிறைய முன்னாள் வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனெனில் ஒரு காலத்தில் இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் கில்லாடியாக திகழ்ந்தனர்.
இந்நிலையில் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள சீனியர் வீரர்களை சந்தித்து ஆலோசனை பெறுவோம் என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கடந்த இரண்டு சீசன்களாக நாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக சொந்த மண்ணில் எங்களது பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தொடர்ந்து தடுமாறுவது கவலை அளிக்கிறது. நாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக முன்பு சிறப்பாக செயல்பட்டது போன்று தற்போது நன்றாக செயல்பட முடியாததற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அதற்கான உறுதியான பதிலும் என்னிடம் இல்லை.
சுழற்பந்து வீச்சை தனிப்பட்ட முறையிலும், ஒரு பேட்டிங் குழுவாகவும் சிறப்பாக எதிர்கொள்வது எப்படி என்பதில் நாங்கள் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சினையை ஒரே நாள் இரவில் சரிசெய்து விட முடியாது. நாங்கள் நமக்கு என்ன மாதிரியான முன்னேற்றம் தேவை என்பதை பார்ப்போம். அடுத்து வரக்கூடிய இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பாக நாங்கள் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள தயாராக இருப்போம் என்று நம்புகிறேன்.
அதற்காக சுழற்பந்து வீச்சை மிகவும் சிறப்பாக விளையாடிய சீனியர் வீரர்களை சந்தித்து ஆலோசனை பெறுவோம். சுழற்பந்து வீச்சுக்கு எதிரான நமது பாரம்பரிய ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட ஒவ்வொரு வீரரும் தங்களது ஆட்ட நுணுக்கத்தை மேம்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?