வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கணினி முன் அமர்ந்தாள் கல்யாணி. மகன், மகள் இருவருக்கும் வரம் பார்க்கிறாள்.
மேட்ரி மோனியில் தேட ஆரம்பித்தாள்.
கணவரிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். பெண் கொடுத்து பெண் எடுப்பது போல் வரன் பார்க்க வேண்டும் என்று.
அதே போல் அமைந்தும் விட்டது. நல்ல வரன்களாக தெரிந்தது. படிப்பு, உயரம், உத்தியோகம் எல்லாம் பார்த்து செலக்ட் செய்தாயிற்று.
அவர்களிடம் "உங்கள் மகளுக்கு வரன் பாக்கறீங்களா? எங்க மகனுக்கும் பாத்துட்டுருக்கோம். நம்ப பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்போமே, நீங்க என்ன சொல்றீங்க?" என்று இரண்டு மூன்று பேரிடம் கேட்டுக் கேட்டு ஒரு வழியாக ஒன்று ஓகேயானது.
பெண் பார்க்கும் படலமும் இவர்கள் வீட்டிலேயே அமர்க்களமாக நடந்தது. அண்ணன்கள், தங்கைகள் மொட்டை மாடியில் சென்று கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் பேசினர்.
பின்னர் கீழே வரும்போது மலர்ந்திருந்த முகங்கள் பச்சைக் கொடி காட்டியது.
லௌகீகம், நிச்சயதார்த்தம் பற்றி முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிவு பெற்றது. "ஒங்கப் பொண்ணுக்கு நீங்கச் செய்யப் போறீங்க. எங்கப் பொண்ணுக்கு நாங்க செய்யப் போறோம்" என்றார் ஆனந்தின் அம்மா.
அசோக் ஆனந்திடம் அன்று மாலை சந்தித்துப் பேச நினைத்திருந்தான்.
"வாங்க ஆனந்த், ஒக்காருங்க" என்று சொல்லி, இரண்டு கார்ன் சூப் ஆர்டர் செய்தான். ஆம் ஹோட்டலில்தான் சந்திப்பு.
"என்ன விஷயமா வரச்சொன்னீங்க?"
"ஒன்னுமில்ல, நம்ப ரெண்டு பெரும் கல்யாணத்திற்குப் பிறகு, நான் ஒங்க வீட்டுக்கும், நீங்க எங்க வீட்டுக்கும் போயிடலாமா?" என்று கேட்ட அசோக்கை வியப்புடன் பார்த்தான்.
"ஆமாம் மச்சான், என் தங்கச்சி எங்க வீட்டுல ரொம்பச் செல்லம். பெரிசா வேலையெல்லாம் செய்ய மாட்டா. அவள் ஒங்க வீட்டுக்கு வந்தா, கண்டிப்பா ஒத்து வருவான்னு சொல்ல முடியாது" அசோக் சொல்லி முடிப்பதற்குள் ஆனந்த் சொன்னான் "எங்க வீட்லயும் என் தங்கச்சிதான் எல்லாம். நீங்க சொல்றதுதான் சரி. நடக்குமா?"
"நடத்திப் பாப்போம்" என்றான் ஆனந்த்.
ஒரு புரட்சி செய்யப்போவதாகச் சொல்லி இரண்டு வீட்டிலும் எதிர்ப்பாகி, ஒரு வழியாக சம்மதித்து இரண்டு மாப்பிள்ளைகளும் புக்ககம் புகுந்தார்கள்.
இரண்டு மாதங்கள் சென்றன. இரண்டு வீட்டிலும் மாப்பிள்ளைகளுக்கு ஒரே அன்பு மழைதான், கவனிப்பு தான், மரியாதை தான்.
ஆனால் பெற்றவர்களுக்கு பெண்களையே பிடிக்காமல் போனது. மிகவும் ஆட்டி வைப்பது போல் தோன்றியது.
அன்று ஆனந்த் மனைவி அட்சயாவின் பிறந்தநாள். அசோக் தன் மனைவி, மாமனார் மாமியாருடன் பிறந்த வீடு வந்தான். அவளுக்குப் பிடித்தமான ஹேண்ட் பேக் மற்றும் ஒரு வாட்ச் வாங்கி வந்திருந்தான்.
சிம்பிளாக குடும்பப் பார்ட்டியை முடித்துக் கொண்டு அசோக் மீண்டும் கிளம்பும் போது அசோக்கின் பெற்றோருக்கு என்னவோ உறுத்தியது.
ஆனந்தின் பெற்றோருக்கும் எதையோ பறிகொடுத்தாற் போலானது.
அடுத்த வாரமே பெற்றோர்கள் கூடி பேச்சு வார்த்தை நடந்தது. அசோக் சொன்னான். "புது மருமகள் வந்தால் நீங்கள் யாரும் அவர்களை மகளாகவோ, ஒரு மனுஷியாகவோ பார்ப்பதில்லை. அவர்களும் உங்களை ஒரு அப்பா அம்மாவாக பார்ப்பதில்லை. சண்டைகளும், மனக்கசப்புகளும், வெறுப்பும், மரியாதையின்மையும் மட்டுமே மிச்சமாகிறது. அதனால்தான் இந்த முடிவு எடுத்தோம்" என்று சொல்ல அனைவருக்குமே என்னவோ போலானது.
பிறகென்ன இப்போது பெண்கள் இருவரும் கணவரோடு புக்ககம் புகுந்து இனிதான ஒரு வாழ்க்கை நடத்தினர். அசோக்கும், ஆனந்தும் யதார்த்தத்திற்கு வந்தனர்.
ஆனால் மாப்பிள்ளை இருவரும் ஒரு சூட்கேசில் துணிமணி எடுத்துச் சென்றாலும் இப்போது மருமகள்கள் இருவரும் ஒரு குட்டி யானை நிரம்ப சீர் எடுத்து வந்தார்கள்!
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்