சென்னையில் ரெயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்த 944 பேர் கைது: ரூ. 4.45 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் ரெயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்த 944 பேர் கைது: ரூ. 4.45 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, செப். 18–


ரெயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்த 944 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


ரெயில்வே தண்டவாளங்களில் சட்டவிரோதமாக நுழைவது, ரெயில்வேயில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதைத் தடுக்க, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு 2025 ஆண்டில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை), சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்த 944 பேரைக் கைது செய்தனர். அவர்கள் மீது 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, ரூ. 4,45,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


சென்னை கோட்டம் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை, ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளுக்கு அருகே உள்ள சமூகங்களில் 126 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நேரடி கலந்துரையாடல்கள், செயல் விளக்கங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்குகள் மூலம், தண்டவாளங்களைக் கடப்பதன் ஆபத்துகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். மேலும், நடைபாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் லெவல் கிராசிங்குகள் போன்ற பாதுகாப்பான வழிகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களும் ரயில் தண்டவாளங்களைக் கடப்பதைத் தவிர்க்குமாறு சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒரு நொடி கவனக்குறைவுகூட ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தக்கூடும். பொதுமக்கள் தங்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பிற்காக நடைபாலங்கள், லெவல் கிராசிங்குகள் மற்றும் சுரங்கப்பாதைகளை மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. தண்டவாளங்களில் அத்துமீறுவதைத் தவிர்த்து, விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%