சென்னை - எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த 4 பெண்கள் அலையில் சிக்கி உயிரிழப்பு
எண்ணூர்: சென்னை - எண்ணூர் பகுதியில் கடலில் குளித்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பெண் உட்பட கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்களான பவானி (19), ஷாலினி (18), காயத்ரி (18), கும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வாசியான தேவகி (28) ஆகிய 4 பேரும் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், பவானி உள்ளிட்ட 4 பேரும் இன்று (அக்.31) பணிக்கு செல்லாமல் ரயில் மூலம் சென்னை எண்ணூர் பகுதிக்கு வந்துள்ளனர். மதியம் எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதிக்கு வந்த பிறகு, அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் கடல் அலையில் சிக்கி, கடலின் உள் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மற்ற மூவரும், அவரைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது, அவர்களும் கடல் அலையில் சிக்கி கடலின் உள் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கரை ஒதுங்கின.
இதுகுறித்து, தகவலறிந்த எண்ணூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, 4 பெண்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?