சென்னை பெரியார் நகரில் ஜனவரி 13-ந்தேதி புதிய பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்
‘சென்னை பெரியார் நகரில் புதிதாக ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் வருகிற ஜனவரி 13-ந்தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் கூறினார்.
மொபைல் பாஸ்போர்ட் சேவை வாகனம் மற்றும் மின்னணு பாஸ்போர்ட் போன்ற திட்டங்களை முன்னெடுத்து சென்ற, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-–
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் இருக்க வேண்டும் என்பது மத்திய வெளியுறவுத்துறையின் திட்டமாகும். அதன்படி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதியில் வடசென்னை தொகுதியில் மட்டும் பாஸ்போர்ட் சேவை மையம் இல்லை.
இதனை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியிலுள்ள பெரியார் நகர், துணை தபால் நிலையத்தில் புதிதாக பாஸ்போர்ட் சேவை மையம் ஒன்றை புத்தாண்டில் அதாவது ஜனவரி 13-ந்தேதி திறக்க திட்டமிட்டுள்ளோம். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இங்கு தினசரி பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, புதுப்பிப்பது, போலீசார் அனுமதி சீட்டு பெறுவது உள்பட 80 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது. தட்கல் முறையில் இங்கு விண்ணப்பிக்க முடியாது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டு 5.25 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 90 ஆயிரத்து 127 சாதாரண வகை பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மார்ச் மாதம் முதல் 3 லட்சத்து 87 ஆயிரத்து 684 மின்னணு பாஸ்போர்ட் உள்பட கடந்த 19-ந்தேதி வரை 4 லட்சத்து 77 ஆயிரத்து 811 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் 5 லட்சத்து 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டி விடுவோம். வேலை மற்றும் கல்வி பயில்வதற்காக வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட்டுகளை பெறுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் புதுப்பித்து கொள்கின்றனர். இதனால் இங்கு புதுப்பிப்பது என்பது குறைவாக தான் இருக்கிறது.
பாஸ்போர்ட் எவ்வாறு பெறுவது? என்பது குறித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு அளிக்க உள்ளோம். தொடர்ந்து, சென்னை புத்தக கண்காட்சியிலும் அரங்கு ஒன்று அமைத்து அதிலும் விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது. அதேபோல் நடமாடும் மொபைல் வேன் மூலமும் பொதுமக்களுக்கு சேவை அளிக்கப்படுகிறது.