சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு முகாம்களில் இதுவரை 43 ஆயிரம் பேர் மருத்துவ பரிசோதனை
சேலம், ஜன.
சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் "நலம் காக்கும் ஸ்டாலின்" மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், கலெக்டர் இரா. பிருந்தாதேவி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப்பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:–
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக "நலம் காக்கும் ஸ்டாலின்" மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை கடந்தாண்டு ஆகஸ்ட் 2 அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து அன்றையதினம் சேலம் மாநகராட்சி, மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமானது தொடங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 30 மருத்துவ முகாம்களில் 18,192 ஆண்களும், 24,932 பெண்களும் என மொத்தம் 43,124 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்று உள்ளனர். இதில் 32,983 பேருக்கு ரத்தப் பரிசோதனையும், 29,597 பேருக்கு இசிஜி பரிசோதனையும், 4,318 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 4,663 பேருக்கு எக்கோ பரிசோதனையும் மற்றும் 3,057 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நடைபெறும் இச்சிறப்பு மருத்துவ முகாமானது சேலம் வட்டாரம், ஜாகீர் அம்மாபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.
மேலும், இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவ துறைகள் சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் மா.இளங்கோவன், துணை மேயர் மா.சாரதாதேவி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலர் (சேலம்) சௌண்டம்மாள், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.