டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னையில் வெள்ள மீட்பு, நிவாரண நடவடிக்கை ஏற்பாடுகள் எப்படி?
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க ஏதுவாக மாநகராட்சி சார்பில், 1 லட்சம் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயலால், சாலைகளில் தேங்கும் நீரை அகற்ற 170 எண்ணிக்கையில் 100 எச்பி திறன் கொண்ட இயந்திர மோட்டார் பம்புகள், நீர் தேங்கும் இடங்களென கண்டறியப்பட்டு, அங்கு முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 550 டிராக்டர்கள் மீது பொருத்தப்பட்ட இயந்திர மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்ற, பல்வேறு திறன் கொண்ட மொத்தம் 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக இயங்க ஏதுவாக 145 நீர் இறைப்பான்களும், தானியங்கி கண்காணிப்பு கருவிகளும் தயார் நிலையில் உள்ளன.
51 நீர் உறிஞ்சும் லாரிகள் சென்னை குடிநீர் வாரியம் மூலம் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 30 லாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளன. 29 ரயில்வே கல்வெர்ட்களிலும் மழைநீர் தங்குதடையின்றி செல்ல நவீன இயந்தரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது.
விழும் மரங்களை அகற்ற 15 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள், 2 சக்திமான் ஹைட்ராலிக் ஏணி, 224 கையடக்க மர அறுவை அறுப்பான்கள், 216 டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் என, மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னையில் வெள்ள மீட்பு, நிவாரண நடவடிக்கை ஏற்பாடுகள் எப்படி?
Cylcone Ditwah updates: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
36 படகுகள் மாநகராட்சியால் வாங்கப்பட்டு மண்டலங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக மீன்வளத் துறையுடன் ஒருங்கிணைந்து, 36 படகுகள் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகரம் முழுவதும் 215 நிவாரண மையங்கள் தயாராக உள்ளது. மேலும், 111 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. பிளீச்சிங் பவுடர், லைம் பவுடர், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளது,
சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலங்களில் 25 நபர் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 25 நபர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளனர். 5 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க ஆவின் பால் பவுடர் 1 லட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய 1 லட்சம் நிவாரண தொகுப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.