தமிழகத்தில் இதுவரை 3.5 லட்சம் வாழை மரங்கள் சேதம்’ - நிவாரணம் வழங்க கோரிக்கை
Nov 30 2025
11
சென்னை: ‘பருவமழை தீவிரத்தால் நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 3.5 லட்சம் வாழை மரங்கள் உள்ளிட்ட விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள பிராஞ்சேரி மற்றும் மேலசேவல் சொக்கலிங்கம் உள்ளிட்ட கிராமங்களில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 3.5 லட்சம் வாழைமரங்கள் குலை விடும் நிலையில் முறிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால், ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருமானம் இழந்து, ஒரு பருவத்தையே விவசாயிகள் பறிகொடுத்துள்ளனர். மேலும், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம் போன்ற வேளாண் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கடந்த தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்படைந்த குறுவை நெல் அறுவடை, சம்பா, தாளடி இளம் பயிர்களுக்கான நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. வேளாண் துறை அமைச்சர் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், வேளாண் துறை அலுவலர்களின் கணக்கெடுப்பு சரிவர நடைபெறாததால் இழப்பீடு வழங்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், மறு விதைப்பு செய்து பயிர்கள் வளர்ந்து வந்த சூழலில், பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. எனவே விவசாயிகள் இழப்பை ஈடுசெய்ய குறுவை நெல் மகசூல் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத்தையும், சம்பா மற்றும் தாளடி பயிர்களின் பாதிப்புக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், விளைநிலங்களில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வடித்திட, வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையை முடுக்கி விடவேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?