தொடர் பனி, மழை எதிரொலி: மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4,500-க்கு விற்பனை
மதுரை: மதுரை மாவடத்தில் நீடிக்கும் தொடர் பனி மற்றும் மழையால் மதுரை மல்லிகைப்பூ உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், மல்லிகைப் பூ பற்றாக்குறையால் முகூர்த்த நாட்கள், விழாக் காலங்கள் இல்லாமலேயே ஒரு கிலோ மல்லிகைப்பூ வரலாறு காணாத வகையில் ரூ.4,500 என விற்பனையாகிறது.
மதுரை மாவட்டத்தின் மண்வளம், தட்பவெப்ப சூழ்நிலையில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்கள் குண்டு, குண்டாக வெண் நிறமும், தடித்த காம்பு, தனித்துவமான மணத்தையும் கொண்டுள்ளதால் உலகளவில் பிரசித்தி பெற்றது. அதற்காக, மதுரை மல்லிகைப் பூக்களுக்கு கடந்த 2012-13-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
மேலும், மதுரை மல்லிகைப்பூ, நறுமணப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. அதனால், உள்ளூர் பயன்பாட்டிற்கு போக, சிங்கப்பூர், குவைத், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் மூலம், நறுமணப் பொருட்கள் தயாரிப்பதற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு கடல் கடந்தும் மணம் வீசி வருகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் மலர் சந்தைகளில் மதுரை மல்லிகைப் பூக்களுக்கும் தனி வரவேற்பு உண்டு.
மதுரை மட்டுமில்லாது, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லிகைப் பூக்கள், தற்போது வரை ‘மதுரை மல்லிகை’ அடையாளத்துடனேயே தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லியின் தரம் மற்றும் சீசனைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். மதுரை மல்லிகைப்பூ 3 டன் தமிழக சந்தைகளிலும், 4 முதல் 6 டன் வரை வெளிநாடுகளுக்கும் தற்போது ஏற்றுமதியாகிறது.
மதுரை மல்லிகைப்பூ விவசாயத்தை ‘கரோனா’வுக்கு முன், பின் என இரண்டு நிலைகளாக பிரிக்க வேண்டிய உள்ளது. ‘கரோனா’வுக்கு முன் வரை, மதுரை மல்லிகைப்பூ சாகுபடி ஏக்கரில் நடைபெற்று வந்தது. ‘கரோனா’ ஊரடங்கு காலத்தில் கோயில்கள் பூஜைகள் நின்று போனதோடு, பெண்களும் வீட்டை விட்டு வேளியே வராததால் பூக்கள் பயன்பாடு முற்றிலும் நின்றுபோனது.
மதுரை மல்லிகைப்பூக்கள் விவசாயத்தில், விவசாயிகளுடைய பராமரிப்பு அன்றாடம் அதிகம் தேவைப்படுகிறது. ஊரடங்கில் பணபுப்ழக்கமே இல்லாத நிலையில் ஏராளமான விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் போட்டிருந்த மதுரை மல்லிகைப்பூ செடிகளை அழித்துவிட்டு மாற்று விவசாயத்துக்கு மாறினர்.
கரோனாவுக்கு பின் ஒரளவு நிலை மாறியதால், விவசாயிகள் மதுரை மல்லிகை விவசாயத்திற்கு திரும்பினர். ஆனாலும், தற்போது வரை பழைய சாகுபடி பரப்பை தோட்டக்கலைத் துறையால் மதுரை மல்லிகை சாகுபடியில் எட்ட முடியவில்லை.
தற்போது மழையால் ஒட்டுமொத்த மதுரை மல்லிகை பூக்கள் உற்பத்தியும் முடங்கியதால் தற்போது சாதாரண நாட்களிலே மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
விழாக் காலங்கள், முகூர்த்த நாட்கள் இல்லாமலேயே மதுரை மல்லிகை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் சந்தையில் மதுரை மல்லி கிலோ ரூ.4500 வரை விற்பனையானது.
கோயில்களிலும் பெரும் கூட்டம் வரவில்லை. அப்படியிருந்தும் மதுரை மல்லிகை விலை சாதாரண நாளான இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்த சம்பவம், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்க பொருளாளர் முருகன் கூறுகையில், ‘‘பனியுடன் மழையும் தற்போது சேர்ந்து கொண்டதால் பூக்கள் உற்பத்தி குறைந்து, விற்பனையும் மிக சுமாராக உள்ளது.
அரை டன்னிலிருந்து முக்கால் டன் வரைதான் மொத்த பூக்கள் வரத்தே உள்ளது. முகூர்த்த நாட்கள், விழாக்கள் இல்லாத இன்றே மதுரை மல்லிகை பூக்கள் விலை உயர்ந்த நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்களில் இன்னும் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.