தண்ணீர் சிக்கனம்.. தேவை இக்கணம்

தண்ணீர் சிக்கனம்.. தேவை இக்கணம்


சிக்கனமாக கையாள வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று தண்ணீர் ...காசு கொடுத்தாலாவது இப்போது கிடைக்கிறது இன்னும் ஒரு தலைமுறை தாண்டினால் அதற்கு வழி இல்லாமல் போய் விடுமோ என்கிற அளவு நம்மை பயமுறுத்துகிறது புள்ளி விபரங்கள் ...


நான் சின்ன பிள்ளையாக இருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு கிணறு உண்டு ...20 30 அடியிலேயே தண்ணீர் ஊற்றாக பெருகும் ...தண்ணீர் இறைக்க என்று ஆள் உண்டு .அவரை தண்ணீர் காரர் என்று அழைப்போம் .அவர் வாளியில் தண்ணீரை இரைத்து தொட்டிகளில் நிரப்புவார். எல்லா வீடுகளிலுமே கிணற்றின் பக்கத்தில் சிமெண்ட் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கும் .குளிக்கும் அறையிலும் சிமெண்ட் தொட்டியில் தண்ணீரை நிரப்புவோம் ..60களில் வீட்டுக்குள் குழாய் இருந்த நினைவு எனக்கு இல்லை .தண்ணீரை வாளியில் வைத்து புழங்குவோம்.


குழாய்கள் இல்லாத காரணத்தினால் தண்ணீர் சிக்கனமாகவே புழங்கப்பட்டது. என் அம்மா அரிசி கழுவும் தண்ணீரிலேயே காய்கறியை கழுவுவாள் ..அந்தத் தண்ணீர் மாட்டிற்கு கழுநீராக ஒரு மண் பானையில் சேகரிக்கப்படும்.

அதுபோல குளிக்கும் தண்ணீர் தோட்டத்திற்கு பாயும். துவைத்து அலசும் தண்ணீரை கூட புறவாசல் கழுவி விட ..

நடைமிதி துவைக்க ...பயன்படுத்துவர் எனக்குத் தெரிந்து தண்ணீரை வீணாக செல்ல வழித்தது அந்த காலகட்டத்தில் நான் அறியாதது.


அந்த அடிப்பம்பில் தண்ணீர் அடிக்கும் பழக்கத்திலும் தண்ணீர் சிக்கனமாகவே புழங்கப்பட்டது. எப்போது மோட்டார் வைத்து மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை ஏற்றி வீடு முழுக்க குழாய்கள் வைத்து புழங்க ஆரம்பித்தோமோ அப்போதே தண்ணீர் சிக்கனம் காணாமல் போய்விட்டது.


இப்போது உள்ள காலம் மாற்றத்தில் அவசர உலகத்தில் இதைப் பற்றி எல்லாம் பேசினால் பழமைவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள். தண்ணீர் ஏற்றுவது ஒரு வழி என்றால் இறக்கி செலவழிப்பது பல வழிகளில் ..


.1978 இல் தென்காசி அருகே இடைக்காலில் மருத்துவராக என் கணவர் பணியாற்றிய போது அந்த கிராமத்தில் தண்ணீர் வசதி கிடையாது.கடுமையான உப்பு தண்ணீர். அதனால் மழை நீரை பாத்திரங்கள் வைத்து சேகரித்து அதை வடிகட்டி அதையே சமையலுக்கு புழங்குவோம்.1979 ல் சென்னையில் நாங்கள் இந்திரா நகரில் இருந்தபோது மொத்தம் நாலு வாளி தண்ணீர் மட்டுமே வரும். ஒரு நாள் முழுக்க புழக்கத்திற்கு அதுதான். இல்லாவிட்டால் ரோட்டில் அலைந்து திரிந்து தான் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வர வேண்டும். 


தண்ணீருக்கு பலவாறு கஷ்டப்பட்டதாலோ என்னமோ இன்றும் தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்க முடிகிறது .சிக்கனம் ஒரு பக்கம் என்றால் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் ..எப்போதாவது அபூர்வமாகத் தான் நம்மூர்களில் மழை பெய்கிறது ..அந்த மழை நீர் சாலைகளில் ஓடி வீணாக போகும் போது மனம் கஷ்டப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது நம் பொறுப்பு இன்னும் அதிகமாக வேண்டும் எந்தெந்த வழியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அதை செய்ய வேண்டும்.


கல்யாண வீட்டில் சாப்பிடும் போது ஒரு பாட்டில் தண்ணீர் வைத்தால் கூட அதை பாதிப்பேர் தொடாமலோ இல்ல பாதி குடித்து விட்டோ வீணாக்கும்போது மனசு கஷ்டமாக இருக்கிறது அதை கையில் நான் கையில் எடுத்து வர வெட்கப்பட மாட்டேன்.


பொதுவாக குழாய்களை திறக்கும் போது பாதி திறந்தாலே போதும் ..மேலும் வீணாக்கும் R.O. தண்ணீரை வேறு எந்த விதத்திலாவது உபயோகப்படுத்திக் கொள்ளலாம் (கிச்சன் தரை துடைக்க.. கிச்சன் டவலை துவைக்க என ) சில அப்பார்ட்மெண்ட்களில் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு செடிகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது .


தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கும் போது அது வீட்டுக்கு மட்டுமில்லாமல் ஊருக்கே நல்லது. உணர்ந்து கொள்வோம் .



தி.வள்ளி

திருநெல்வேலி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%