தந்தையுமானவள்

தந்தையுமானவள்


கணவன் முகம் மிகவும் வாடியிருப்பதைக் கண்டாள் கல்யாணி. எதுவும் கேட்கவில்லை. அலுவலகத்தில்

எதுவும் பிரச்சினையா தெரியவில்லை.  


சாதாரணமாக எதையும் வெளிப்படையாக பேசமாட்டான். கேட்டால் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறானா? என்று விட்டு விட்டாள்.


அடுத்தடுத்து இரண்டு நாட்கள் அலுவலகம் செல்லவில்லை. தலைவலி, வயிற்றுவலி என்று சொன்னான்.


இன்று விடுவதாக இல்லை. இருபது தேதியாயிற்றே? ஒன்றாம் தேதி ஓடிவந்து விடுமே! எல்லாவற்றிற்கும் எடுத்து வைத்தாகனும். யோசித்தாள்.


"என்னாச்சுங்க? ஏதோ நடந்துருக்கு, சொல்ல மாட்டிங்களா? என்று மெதுவாகக் கேட்டாள்.


"ஆமான்டி, எல்லாம் என்மேலத்தான் தப்பு. இப்ப என்ன செய்யனும்னு சொல்ற?"


"ஏன் எறிஞ்சு விழறீங்க? ஆபீஸ் போகலியேன்னு கேட்டேன்" என்றாள்.


ஆபீஸில் ஏதோ சின்னப் பிரச்சினைதான். தலைபோவது ஒன்றுமில்லை. இருந்தாலும் முதலாளி தான் சொல்வதுதான் சரியென்று சொல்லி இவனை பேசவே விடவில்லை. "நாளைலேந்து நீ வேற எங்கியானும் வேலைப் பாத்துக்க, ஒன்னாம் தேதி வந்து சம்பளம் வாங்கிக்க" என்று சொல்லிவிட்டார்.


எங்கு போய் வேலை தேடுவது? மனைவி, இரண்டு வயது குழந்தை, வயதான அப்பா (அம்மா இல்லை) எல்லோரையும் எப்படிப் பார்த்துக் கொள்வது? ஒன்றும் புரியாமல் போனது.


மெல்ல மெல்ல சொல்லி முடித்தான். கல்யாணிக்கு பகீரென்றது. இது என்ன கொடுமை? கடவுளே இனி ஆகப்போவதென்ன? யோசிக்கலானாள்.


"நா வேணும்னா எங்கியும் அப்ளை பண்ணவா? வேலைக்குப் போகட்டுமா?" மெல்லக் கேட்டாள்.


"என்னது, வேலைக்குப் போரியா? அப்பிடியே ஒன்னக்கூப்பிட்டு குடுக்கறாங்க. குடும்பத்தையே காப்பாத்தப் போறியாக்கும்".


"மனுஷனுக்கு வேலை போனதும் மரியாதையும் போகுது. எதாச்சும் சொல்லிடப் போறேன்" என்றான்.


வயதான அப்பா விஷயம் கேள்விப்பட்டு மகவும் வருந்தினார். தானும் இரண்டு மூன்று இடத்தில் மகனுக்காக வேலைக் கேட்டுப்

பார்த்தார்.


ஒரு மாதம் ஓடப்போனது. வாடகை, மளிகை, மருத்துவம், என்று எதையும் குறைக்க முடியவில்லை. கையிருப்பு கரைய ஆரம்பித்தது. சேமிப்பு வெளியே வந்தது. 


கணவனுக்கும் வேலைக் கிடைக்கவில்லை. அதிக சம்பளம் கேட்பதினால் அவனுக்கு உடனே வேலைக் கிடைக்கவில்லைஎன்பதைப் புரிந்து கொண்டாள்.


"என்னங்க ஏந்திரிங்க, இன்னைக்கு ஒரு எடத்துல வேலைக் கேட்டுப் போனேன். கெடைச்ச மாதிரிதான். எப்படியும் நல்ல சம்பளம் கிடைக்கும்னு நம்பறேன்" சொல்லி முடித்தாள்.


அவன் வாயைத் திறக்கு முன், "நீ கெளம்பி போய்ட்டு வாம்மா. இவன் வழிக்கு வரமாட்டான். இவன் கோபம் இவனுக்கு முதல் எதிரி. ரெண்டாவது ஈகோ புடிச்சு அலையறது. கொழந்தைய நான் பாத்துக்கறேன் மா" என்றார்.


எதுவும் நடக்காதது போல் இருந்தான். ஆயிற்று மூன்று மாதமாக கல்யாணி வேலைக்குப் போய் வீட்டையும் கவனிக்கிறாள்.


இவன் வேலைத் தேடிக் கொண்டிருக்கிறான். "ஏன்டா அந்தப் புள்ள அம்புட்டு வேலையும் செஞ்சுட்டு வேலைக்கும் போய்ட்டு வருது. ஒன்னோட துணிமணி கூட ஒன்னாலத் துவைச்சுக்க முடியாதா? எதாச்சும் வீட்டுக்கு உதவியா இருக்க மாட்டியா?" என்று கேட்டார்.


ரோசம் வந்துவிட்டது. அப்பாவைக் கண்டபடித் திட்டித் தீர்த்தான்.


அன்று மாலை மாமனாரிடம் தனியாக பேசினாள். "விடுங்க மாமா, ஒங்கப் புள்ளைக்கு இனிமே வேலைக்குப் போக வணங்காது. எனக்கு நல்லாத் தெரியும். சண்டை பூசல் வேண்டாம்.  

குழந்தைக்கு அப்பாவாய் இருந்தா போதும்" என்றாள்.


மகனை நினைத்து கவலையும் வேதனையும் கொண்டார். பேத்தியை நினைத்தும் வருந்தினார். நல்லபடியாக இந்தக் குழந்தை வளர்ந்து ஆளாக வேண்டுமே என்று கவலைப் பட்டார்.


மறுநாள் வெளியில் சென்றவர் தனது நணபர்களிடம் மகனைப் பற்றிச் சொல்லி வருந்தினார். மருமகளைப் பற்றி சொல்லும் போது "என் மருமகள் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமில்லை. "தந்தையுமானவள்" என்று பெருமையாகச் சொன்னார்.


வி.பிரபாவதி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%