தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை, செப்.17-


இந்திய தேர்தல் கமிஷன், பீகாரில் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டது.


அதன்மூலம் அந்த மாநிலத்தில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள் தங்களது குடியுரிமை ஆவணங்களை அதாவது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 11 சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று கூறியது.


மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவத்தை கொடுத்து அதனை பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர்.


இந்த பணியின் மூலம் பீகாரில் இருந்த 7.24 கோடி வாக்காளர்களில் சுமார் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதில் 22 லட்சம் பேர் இறந்து விட்டதாகவும், 35 லட்சம் பேர் இடம் மாறி சென்று விட்டதாகவும், 7 லட்சம் பேருக்கு 2 இடங்களில் வாக்குரிமை இருந்ததாகவும், ஒரு லட்சம் பேர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் தேர்தல் கமிஷன் கூறியது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.


அதேபோல் எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இது வாக்கு திருட்டு என்று கடுமையாக சாடினர்.


இதற்கிடையே பீகாரில் நடத்தப்பட்டது போல தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதற்காக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.


இந்த சூழ்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டும் தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு தடை விதிக்க முடியாது. ஆனால் இந்த பணியை மேற்கொள்ளும்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியது.


இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.


அப்போது அவர், “தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு தயார் ஆகுங்கள். அதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தால் நிரப்ப வேண்டும்.


மேலும் வாக்குச்சாவடி அலுவலர் பணிக்கு ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மட்டுமின்றி இனி அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மிக முக்கியமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வாக்குச்சாவடி எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%