தலை ஆட்டல்

தலை ஆட்டல்


                 ‌இன்றோடு ஆயிற்று; ஒரு வாரம் நெல்லை போய் வந்த மருதாசலம், தலை வலி என்றுதான் படுத்தார். படுக்கை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அனத்தலும் ஆறாட்டமுமாய் அன்றைய நீள் பொழுது முழுவதும்,இள வெந்நீரும், பாலும் புழுங்கலரிசி கஞ்சியுமே உணவாயிற்று. இரவு பொழுது , எங்களுக்கு நரகமாயிற்று. மறுநாளும் மாலை வரை வலி குறையாமல் இருக்க, மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக,பக்கத்து தெருவிலிருக்கும் மகளிடம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

                          அப்புறம் வேறென்ன? உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ' ஏன் நேற்றே சொல்லவில்லை' என்று விசாலத்துக்கு அர்ச்சனை! மள மளவென வேலைகள் துரிதமாக நடந்தன. மருத்துவமனையில் சேர்த்து அத்தனை சோதனைகள் செய்து, ஸ்ட்ரோக் லைக் ஸின்ட்ரோம்' என்று சொல்லி விட்டார்கள். ஒரு வாரம் மருத்துவமனையில் வாசமும், ஒரு லட்சம் செலவும். இன்சூரன்ஸ் இருக்கிறது என்று மருத்துவமனைக்குத் தெரிந்துவிட்டால், வேறு வினையே வேண்டாம். அடுத்த நோயாளி வரும்வரை, பழைய நோயாளி, குணமாகிவிட்டாலும், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கவே மாட்டார்கள். மருத்துவமனைக்கு நூறு சதவிகிதம் பயன்பாடு, எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அது அவர்கள் கோட்பாடு.

                  அமெரிக்காவிலிருந்து மருத்துவரான மருமகளும் மகனும் இடைவிடாமல் ஃபோனில். நலம் விசாரிப்பும்; சில சமயம் அறிவுரையாக;சில சமயம் விசாலத்தின் பொறுப்பை நினைவூட்டுவது போல்;அவளுடைய பொறுப்பற்ற செயல்களாக அவர்கள் சொல்வது 'எதுவாய் இருந்தாலும் உடனே அக்காவிடம் சொல்' என்பதே. என் மகளிடம் உடனடியாக சொல்லாமல், 'ஏன் இருந்தீர்கள்,' என்பதே வழக்கு. மகளும் மருமகனும் ஒருமித்து, ஒத்து பாட ,விசாலம் வெறுமனே அனைத்திற்கும் ' சரி' என்பதாக தலையை ஆட்டி வைத்தாள் .    


         பின்னும் ஒரு நாள், அவருக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக, உடனே மகளுக்கும், மருமகனுக்கும், குறுஞ்செய்தியும், தொலைபேசியும் பறந்தன. 'தனக்கு ஏன் பொல்லாப்பு? பிள்ளைகள் சொல்வதுபோல் செய்து விடலாம்' என்றுதான் நினைத்தாள்.

   அருகிலிருக்கும் மருத்துவமனையில் காண்பிக்க' பெரிதாக ஒன்றுமில்லை.இரத்த அழுத்தத்தில் சிறியதாக சற்று ஊசலாட்டம். ஓய்வு எடுக்கச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

               இன்றும் விசாலத்துக்கு சகஸ்ரநாம அர்ச்சனை! 'ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு அம்மா ஊரையே கூட்டி விடுகிறாள்' என்று.  

 இதற்கும் தலையை ஆட்டி வைத்தாள், விசாலம். 

                     எப்படியும் பழி தாங்க வேண்டியதுதான்! பாம்பென்று தாண்டவும் ஆகாது! பழுதை என்று மிதிக்கவும் ஆகாது! காலம் செய்யும் அலங்கோலம்!காலமோ காலம்!



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%