ஆவுடைநாயகன் ஒரு ரிடையர்ட் ஹெட் மாஸ்டர். வயது 74 .
பெற்ற பிள்ளைகள் இருவரையும் மருமகள்களின் விருப்பத்திற்கேற்ப தனிக்குடித்தனம் அமைத்து கொடுத்து, மனைவி கனகம் உடன் வசித்து வருகிறார் . இவர் ஒரு உணவு பிரியர். சாப்பாட்டிலும் நொறுக்கு தீனியிலும் அதீத சபலம் கொண்டவர் . இரட்டை நாடி உடம்பு வேறு. இவருக்கு வந்திருக்கும் பல நோய்களில் சிலவற்றிர்க்கு இன்னும் மருத்துவம் வரவில்லை என்று கூட சொல்லலாம் . அதனால் இவருக்கு ,
உணவு ஒவ்வாமை மற்றும் உணவு கட்டுப்பாடு என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
இவர் மனைவி கனகாவுக்கு தான் இவரை உணவு கட்டுப்பாடுடன் வைத்திருப்பது , இவருக்கு வேளா வேளைக்கு மருந்து மாத்திரை கொடுப்பது என்பது தினந்தோறும் பிரம்மப் பிரயத்தனமாய் இருக்கும்.
ஆவுடை , சர்வ சதா காலமும் யூடியூப் , இன்ஸ்டா , ஃபேஸ்புக் இவைகளில் வரும் உணவு பண்டங்கள் பற்றியதை பார்த்து பார்த்து, மகிழ்ந்து, அவைகளை ருசித்து விட்டது போல சிறிதளவு திருப்தியும் பெருமளவு ஏக்கமும் கொள்வார்.
தினந்தோறும் இத பண்ணிப்போடு அத பண்ணிப்போடு என்று மனைவியிடம் , தாஜா, கொஞ்சல், கெஞ்சல் , அடம் , கட்டளை, கோபம், பிடிவாதம் , சண்டை , டீல் என்று எல்லா யுக்தி களையும் கையாளுவார். இறுதிச்சுற்றில் வெறும் தயிர் சாதம் தான் வெற்றி பெறும். ஆனாலும் ஆவுடை விடமாட்டார்,
" இன்னிக்கு நீ பண்ணி போடு டி , நா விழுங்காமெ மென்னு மென்னு ருசி மட்டும் பாத்துட்டு துப்பிடறேன் டி" என்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை செய்ய சொல்லி ஒரு விதமாக சமாதானம் ஆவார். இப்படித்தான் இவருக்கும் இவர் மனைவிக்கும் ஓயாத சச்சரவு தினசரி வாடிக்கை.
அன்று ஒரு நாள், இன்ஸ்டா ரீல் ஒன்று அவர் கண்களில் பட்டுவிட்டது , அது , *சைதை மாரி ஓட்டல் வடகறி !!* ஆவுடை யின் சபலம் அசுர பலம் பெற்றுது , ஆனால் போன வார மெடிக்கல் செக்கப்பில் , அவரின் உடல் பாராமீட்டர்கள் சற்று தாறுமாறாக இருந்தது, எனவே மனைவியிடம் வடகறி ஆசை செல்லுபடி ஆகாது என்று,
மரித்து போனாலும் போகிறேன் , இன்று மாலை, எப்படியாவது மாரி ஓட்டல் வடகறியை ருசித்து ஒரு கட்டு கட்டி விட வேண்டும் என்று தீர்மானித்து ஒரு திட்டமும் தீட்டி விட்டார். அன்று மதியம் தகராறு ஏதும் செய்யாமல் தயிர் சாதத்தை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டது கனகா வுக்கு ஆச்சரியமாக இருந்தது.
லன்ச் முடிந்ததும், ஈஸி சேரில் உட்கார்ந்து , வழக்கம் போல் அரை தூக்கத்தில் பெருங் குரட்டை விடாமல், நான்கு மணி எப்போது ஆகும், மாரி ஓட்டலுக்கு புறப்படலாம் என்று கடிகாரத்தையே பார்த்துக் கொண்டே இருந்தாலும் அவர் கண்களுக்கு, கடிகாரம், இட்லி வடகறி தட்டு போலவே தெரிந்தது.
மணி நாலு !!
"கண்ணம்மா , (வழக்கமாக 'அடியேய்' என்று தான் அழைப்பார் , இது வடகறியின் ஜாலம்)
நான் ஆலால சுந்தரம் வீட்டுக்கு போய்ட்டு வரேன் டி , அவனுக்கு இன்னிக்கு பர்த்டே , விஷ் பண்ணிட்டு சீக்கிரம் வந்துடுவேன் என்ன " என்று வாக்கிங் ஸ்டிக்கை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, பரபரப்புடன் , ததகாபுதகா வென்று அகலக்கால் நடையில் மாரி ஓட்டலுக்கு பறந்தார்.
இந்த தேவையற்ற பரபரப்பு , மதியம் அடம் பிடிக்காமல் தயிர் சாதம் சாப்பிட்டது, குரட்டை போடாதது , கண்ணம்மா என்று கூப்பிட்டது , இவை எல்லாம்
கனகாவுக்கு சந்தேகத்தை வரவழைத்தது .
அவளும் அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்தாள் .
*சைதை மாரி ஓட்டல்*- கைகளை கழுவி விட்டு, சௌகரியமான ஒரு இருக்கையை தேடி அமர்ந்து கொண்டார் ஆவுடைநாயகன்.
சர்வர் வந்ததும் , பாராளும் நாயகனின் தோரணையில் , "இட்லி வடகறி" என்ற ஆணையை மிகுந்த ஆர்வத்துடன் பிறப்பித்ததார் !!
சர்வர் , "வடகறி க்ளோஸ் ஆயிடுத்து சார்" என்றான் .
"அங்கெ யெல்லாம் சாப்பிடறாங்களே" என்று ஒரு குழந்தையை போல கோபத்துடன் அழாத குறையாக கேட்டார். "அந்த ஆர்டரோட எல்லாம் முடிஞ்சு போச்சு சார், காலி " என்றான் சர்வர்.
பெருத்த ஏமாற்றத்தில் கனத்த இதயத்துடன் ,
மெல்லிய குரலில் , "சரி, ஒரு காபி " என்றார்.
வீடு திரும்பிய ஆவுடை,
பொத் என்று ஈஸி ச்சேரில் மல்லார்ந்து , கோமா வுக்கே போய் விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தீடீரென ஹால் முழுவதும் வடகறி வாசனை தூக்கியது. கோமாவில் இருந்து மீண்ட ஆவுடை கண் விழித்தார் , தட்டில் இட்லி வடகறியுடன் வந்து நின்ற கனகா , "இந்தாங்க , மென்னு மென்னு ருசி பாத்து துப்பிடணும் , ஆமா கண்டிப்பா சொல்லிட்டேன் " என்றாள்.
( அவரை தொடர்ந்து போன கனகா , ஓட்டல் கல்லா வில் விவரத்தை விளக்கி , "அவருக்கு இங்கு தர வேண்டாம், பார்ஸல் குடுங்கள் , நான் வீட்டில் அளவாக தருகிறேன்" என்று சொல்லி வாங்கி வந்தது தான் அது)
ஆவுடைக்கு மறு ஜென்மம் எடுத்தது போல் இருந்தது. அவருக்கு அவரது கண்களின் நீர் திரையில் அவரது தாய் நிழலாடினாள். *"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ.......".* ஆவுடை வடகறியை கண்ணமாவுக்கும் ஊட்டி விட்டு வெகுவாக ருசித்தார் .
-கோபிநாத்