பந்தபாசம்

பந்தபாசம்


இரண்டு அட்டைப் பெட்டிகள், இரண்டு பெரிய பைகள், இரண்டு கைப்பைகள் என எண்ணி எண்ணிப் பார்த்து எடுத்து வைத்து இரவு பஸ்ஸில் குடும்பத்துடன் கிளம்ப தயாரானார் தணிகாசலம்.


முன் பதிவு செய்த பேருந்தில் ஏறி சாமான்களை சரிபார்த்து வைத்து இருக்கையில் அமர்ந்தார்.


மனைவி வசந்தா, மகன் விஜய், மகள் அனிதா எல்லோருடனும் பயணம் ஆரம்பித்தது.


சென்னையில் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்தி வந்தார் தணிகாசலம். தங்கை பெண்ணிற்கு தன்னால் முடிந்த அளவு எல்லாம் சபை நிறைய செய்ய உத்தேசித்து கிளம்பி விட்டார்.


வசந்தா எப்போதுமே கணவர் சொல்லை மீற மாட்டாள். குழந்தைகளையும் நல்ல பழக்க வழக்கங்களுடனே வளர்த்திருந்தார்கள். நல்லதொருக் என்ன குடும்பம் என்று சொல்லலாம்.


ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது தணிகாசலத்திற்கு. சம்பாதிப்பதை குடும்பத்திற்கே செலவழித்து ஏதோ ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.


பேருந்து கிளம்பி இரண்டு மணி நேரம் இருக்கும். மகள் அனிதாவிற்கு பாத்ரூம் வருவதாக சொல்லவே கண்டக்டர் டிரைவரிடம் சொல்லி கொஞ்சம் பேருந்தை நிறுத்தும்படி கேட்டார்.  


"கொஞ்சம் பொறுங்கைய்யா, பத்து நிமிஷத்துல நிக்கும், போய்க்கலாம்" என்றதும் இருக்கைக்கு வந்து அமர்ந்தார். அனிதாவும் புரிந்து கொண்டாள்.


பொலபொலவென பொழுது விடிந்தது. கடைசி நிறுத்தத்தில் இறங்க வேண்டி இருந்ததால் தயாராக எழுந்து நின்றார்கள்.


மெல்ல ஒவ்வொருவராக இறங்கியபின் தணிகாசலம் லக்கேஜுகளை சரி பார்த்து இறக்கி வைத்தார்.


கடைக்குப் போய் கொஞ்சம் பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு ஒரு ஆட்டோவில் பேரம் பேசினார்.

இருவர் மசியவில்லை. மூன்றாமவர் ஒத்து வரவே நால்வரும் ஏறினார்கள்.


வாசலில் கலர்க் கோலங்களும், தெரு அடைத்துப் பந்தல் போடப்பட்டு உள்ளூர் பக்கத்து கிராமத்து சொந்தங்கள் கூடி யிருந்தார்கள்.


கல்யாணப் பெண் கமலி மாமாவை ஓடிவந்துக் கட்டிக் கொண்டாள்.  


"வாங்க மாமா, வாங்க அத்தை, வாடா செல்லம், வா அனி" என்று உணர்வுப்பூர்வமாய் உள்ளம் பூரிக்க முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்திருக்க வரவேற்று அழைத்துப் போனாள்.


"வாங்கண்ணே, வாங்க அத்தாச்சி, வாங்க மச்சான், வாங்க அண்ணி என்று அவரவர் முறையைச் சொல்லி வரவேற்றனர்.


வீராயி மட்டும் ஓலைக் குடிசையில் காத்திருந்தாள். மகன் வருகைக்காக.


வயதானாலும் தன் வேலைகளை தானே செய்து கொண்டு வயலில் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.


பட்டணத்து வாழ்க்கை அவளுக்கு பிடிக்கவில்லை.

மகன் வந்ததும் முக்கியமான ஒரு சேதி சொல்லக் காத்திருந்தாள்.


பால்காரன் மதி வாசலிலேயே, "என்ன தணி வந்துருக்கானா" என்று உரிமையோடு கேட்டான்.   


சப்தம் கேட்டு தணிகாசலமும் "எலேய், மதிவாணா, எப்படிடா இருக்க?" என்று கேட்டுக்கொண்டே வந்து தோளில் கைபோட்டுப் பேசினான்.


"ஆத்தாள பாத்துட்டியா" என்று மெல்லக் கேட்டான். "ஒன்னப் பாத்துச்சுன்னா சந்தோசப்படும்" என்றான்.


"இந்தோடா, இப்பத்தேன் வந்தோம். புள்ளங்களக் கூட்டிக் கிட்டு போவேன்டா" என்றான்.


வீராயி மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார். மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்த்த சந்தோஷம் ஒரு பக்கம். மகன் ஜரிகை சேலை வாங்கி வந்த சந்தோஷம். பேரப்பிள்ளைகள் "அப்பாயீ, நல்லாயிருக்கீங்களா" என்று கேட்டதும் ஒரு காரணம்.


"ஏ புள்ள வசந்தா, என்னாடீ மொய் செய்யப் போறீங்க" என்று கேட்டாள்.


"கமலிக்கும், மாப்பிள்ளைக்கும் மூனு மூனு கிராம்ல மோதிரம் வாங்கியாந்தோம்.


"பொடவை, வேஷ்டி, தங்கச்சி மாப்பிள்ளைக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டாந்துருக்கோம்" அத்தை என்றாள் மருமகள் வசந்தா.


"தட்டு வரிசை பதினைந்து வக்கப் போறோம்" என்றாள் வசந்தா.


"இல்லப் புள்ள கமலி அப்பன் குடும்பத்துல ஏசுவாக மா. பொண்ணுக்கு நகை நட்டு போடணும்னு சொல்லுவாங்க. நம்ப கஸ்டம் அவுகளுக்கு தெரியாது." என்றாள் வீராயி.


"அவுகளும் இதெல்லாமே கஸ்டப்பட்டுத்தேன் செய்யிறாக. கடன் வாங்குனா கட்றது கஷ்டம் அத்தை" என்றாள்.


"உள்ளார வா என்று வசந்தாவை அழைத்துக் கொண்டு உள்ளே போன வீராயி, ஒரு சின்ன சில்வர் டப்பியிலிருந்து இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தாள்.


அதிர்ந்தாள் வசந்தா. "என்னங்க அத்தை இது?" என்றாள்.


"ஆமாம்மா கமலி வயசுக்கு வந்ததுமே என் மக தேனு எங்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடுத்து "புள்ளைக்கு கலியாணம் வச்சேன்னா, அண்ணங்கிட்ட குடுத்து போடச் சொல்லு. அது யார் முன்னாடியும் தலை குனியக்கூடாதுன்னு சொல்லிட்டாமா".


"இதப் பத்திரமா கொண்டு போவோம். இதோ நானும் கெளம்பி வாறேன்" என்றாள்.


"இல்ல அத்தை, அவுங்க என்ன சொல்லுவாங்களோ தெரில" என்றதும் "மெல்ல எடுத்துச் சொல்லு புரிஞ்சுக்கிருவான்" என்றாள்.


இதோ ஊரார் முன்னாடி தாய்மாமன் சீரை அனைவரும் மெச்சும்படியாக செய்து விட்டார் தணிகாசலம்.


தங்கச்சியின் ஆனந்தக் கண்ணீரிலும், கமலியின் விரிந்த கண்களிலும் மனது உறுத்தினாலும் மனம் நிறைவாக திருமணம் முடித்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.


சின்னப்பலேந்தே அண்ணனும் தங்கச்சியும் பாசமாக இருப்பார்கள். அப்பா இறந்ததும்

குடும்பத்தை பார்க்க வேண்டி பத்தாம் வகுப்போடு நிறுத்தி வயல் வேலைக்குப் போனார். பிறகு டிரைவிங் கற்றுக்கொண்டு ஒரு நண்பர் மூலம் சென்னை வாசியாகி விட்டார்.


எல்லாம் நல்லபடியாக முடிந்து குடும்பத்துடன்

மீண்டும் பேருந்தில் பயணம். இந்த முறை கொஞ்ச நாளாவது இருக்கச் சொல்லி அம்மாவையும் அழைத்து வருகிறார். தங்கையின் பாசம், கமலியின் நேசம், ஆத்தாளின் அரவணைப்பு எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை நினைவலைகளோடு பயணம் தொடர்ந்தது.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%