திண்டிவனம் வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு
விழுப்புரம், அக்.1–
திண்டிவனம் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திண்டிவனத்தில், ரூ.66.89 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவமனை கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, தற்பொழுதுவரை நிறைவுபெற்றுள்ள பணிகள் குறித்தும், மருத்துவமனையில் அமையப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட சலவாதி ரோட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகாிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் மல்லாண்குட்டை குளத்தினை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மல்லாண்குட்டை குளத்தின் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைத்து சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. விரைவில் இப்பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஜக்காம்பேட்டைஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் ஏரிக்ரையை பலப்படுத்தி கலிங்கள் புனரமைத்து மதகு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் வி-சாலை ஊராட்சியில் முருகன் கோயில் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.72 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) லதா, தலைமை மருத்துவர் முரளிஸ்ரீ, உதவி செயற்பொறியாளர் கற்பகம், உதவிபொறியாளர் ஜெயபால், நகராட்சி ஆணையர் சரவணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் (நீர்வளத்துறை) மோகன்ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா,உட்பட பலர் உள்ளனர்.