நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலைச்சாரலை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தின் வடக்கே 3 மைல் தொலைவில் அமைந்துள்ளது' பிரம்மதேசம்' எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். இவ்வூரில் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர்.சுயம்புலிங்கமானஇவரை பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் பூஜை செய்ததால்' பிரம்மதேசம் ' என்று பெயர் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் முன் கோயிலின் முன்புறம் அமைந்துள்ள தெப்பக்குளத்தை காண்கிறோம். தெப்பக்குளத்தின் தெள்ளிய நீரில் கோயில் கோபுரத்தின் பிம்பம் விழுவதைக் காணலாம்.கோயிலுக்குள் செல்லும் முன்
தெற்கே ஆனைமுகத்தானையும் வடக்கே ஆறுமுகத்தானையும் காணலாம்
கோவிலின் முன் ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டு கம்பீரமாக நிற்கிறது.ஏழு அடுக்குகளுக்கும் செல்வதற்கு படிக்கட்டுகள் அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு.
இக்கோவிலின் குடவரை வாயிற்கதவு மிகுந்த பாதுகாப்பாக செய்யப்பட்டுள்ளது. அந்நியப் படையெடுப்பு காலங்களில் அவ்வூர் மக்கள் இக்கோவில் அடைக்கலம் புகுந்து கதவை பூட்டிக் கொள்ளும் பொழுது,பகைவர் யானைகளாலும் தகர்க்க முடியாத அளவு கதவில் மிக நெருக்கமான குமிழ் ஆணிகள் அமைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
கோவிலின் முன்பு தென்பக்கங்களில் " நெல்குத்துப்பிறை "
என்ற பெரிய மிகப் பெரிய கல் மண்டபம் உள்ளது கோவிலின் தினசரி நிவேதனங்களுக்கும், விழா காலங்களுக்கும், பஞ்சகாலத்திற்கும், போர்க்காலங்களிலும், அவ்வூர்வாசிகளுக்கு உணவளிக்க தேவைப்படும் அரிசி இந்த நெல் குத்து பிறையிலேயே கைக்குத்தலாக குத்தப்பட்டதாம்
கோவிலின் சுற்று சுவர்கள் மிக உயரமாகவும், அகலமாகவும் அமைந்துள்ளது .அக்காலத்தில் இவ்வாலயம் மக்களின் போர்க்கால காப்பகமாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதுகின்றனர்.
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், கூரை போன்ற அமைப்பை காணலாம்.. அது காண்போர் கண்ணுக்கு மரவேலைப்பாடு போல் தோன்றினாலும் சிற்பக் கலைஞர்களின் கற்பனைத் திறனால் உருவாக்கப்பட்ட கற்கூரை.
கோவிலின் தென் பக்கத்தில் முதலில் நம் கண்ணெதிரே தோன்றுவது சமயகுரவர்கள்... தேவாரம் பாடிய மூவர் திருச்சந்நிதி... அதைத்தாண்டி மேற்கே சென்றால் சித்திவிநாயகர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்...
அதற்கு வடபுறம் இம் மாவட்டத்திலேயே பெரிய... ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்திகேஸ்வரர் வீற்றிருக்கிறார். அழகிய சிற்ப வேலைப்பாடுகள்...நந்திகேஸ்வரரின் மணிகள், சலங்கைகள், பட்டைகள், ஆபரணங்கள், மிகுந்த கவனத்துடன் செதுக்கப் பட்டுள்ளன.
நந்திகேஸ்வரரின் முன்னிருக்கும் கொடி மரத்திற்கு வடபுறம், மண்டபத்தின் மேல் கல்லிலிருந்து மூன்று கண்ணிகளும் (சங்கிலியுடன்) மணியும் , நாக்கும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தொங்குவதை காணலாம் . சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது
நந்திகேஸ்வரர் வடபுறம் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னதி அமைந்துள்ளது. நுழை வாயிலில் இருபுறமும் கலை நுணுக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட துவாரபாலகர்களைக் காண்கிறோம் .அதற்கப்பால் பிரம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி போன்ற சப்த மாதர்களும் அவர்களுக்குப் எதிரில் தட்சிணாமூர்த்தியும், மகிஷாசுரமர்த்தினி, பால கணபதியும் எழுந்தருளியுள்ளனர்.
கருவறையில் மூலவர் ஸ்ரீ கைலாசநாதர் மிகப் பெரிய லிங்க உருவில் அருள்பாலித்து வருகிறார். கருவறையின் மேலே அமைக்கப்பட்டுள்ள விமானம் மிகப் பெரியதாகும். கோபுர உயரத்தில் பாதி உள்ளதாகவும் அமைந்துள்ளது.
சுவாமி கோயிலில் இருந்து வெளியே வந்து அம்மன் கோயிலை நோக்கி செல்லும் வழியில் இடப்புறம் உள்ள ஒரு யாழியின் வாயில் ஒரு கல்லுருண்டை கீழே விழாத நிலையில் வாய்க்குள் உருளக் கூடிய அளவு கவனமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் இணைக்கும் பாதையாக சொற்பொழிவுகளை நிகழ்த்த தக்க வகையில் சோமவார மண்டபம் அமைந்துள்ளது. அதன் இரு புறங்களிலும் உள்ள தூண்களில் பீமன், புருஷா மிருகம், வாலி - சுக்ரீவன், தர்மபுத்திரன், துரியோதனன், மன்மதன்- ரதி போன்ற பல புராணக் கதைகளை நினைவூட்டும் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இம்மண்டபத்தின் தாண்டி அம்மன் சன்னதிக்குள் நுழைந்தால்,கருவறையில் பிரஹந்நாயகி அம்பாள் அருள்பாலித்து வருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே தனியாக கொடி மரமும், நந்தீஸ்வரரும் இருப்பதை பார்க்கலாம்.
அம்மன் சன்னதிக்கு எதிராக சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் திருவாதிரை மண்டபம் அல்லது ஆருத்ராமண்டபம் எழில் கூடமாக திகழ்கிறது. இம்மண்டபத்தின் தூண்களாய் 20 அழகிய யாழிகள்.. படிக்கட்டில் அமைக்கப்பட்டிருக்கும் யானைகள் .. நாட்டியக் கலை சிற்பங்கள்.. தெய்வத்திரு கோலங்கள் ஆகியவை மிகச்சிறந்த கலை பொக்கிஷமாக காணப்படுகிறது.
சோமவார மண்டபத்தின் தென்கோடியில் " பிச்சாடனர் சபை" மண்டபம் அமைந்துள்ளது. இங்கு நடுநாயகமாக சிவபெருமானும், பரிவார தேவதைகளும், சந்திரன், சூரியன் முதலிய நவகிரகங்களும்,அக்னி, வாயு ,எமன் போன்ற அஷ்டதிக் பாலகர்களும்,நாரதர், தும்புரு முதலிய ரிஷிகளும் ஏககாலத்தில் வாகனத்துடன் காட்சி அளிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.சபையின் கீழ் புறம் காவல் தெய்வமாகிய பைரவர் காட்சியளிக்கிறார். இச்சன்னதி அருகே இக்கோவிலின் ஸ்தலவிருட்சமாகிய இலந்தை மரத்தை காணலாம் .
வெளிப் பிரகாரத்தில் விசாலாட்சி- விஸ்வநாதர் அண்ணாமலையார்- உண்ணாமுலையம்மை ஆகியோருக்கு தனி சன்னதியும்.சாஸ்தா..சண்டேஸ்வரி ஆகியவர்களையும் தரிசிக்கலாம். ஐந்து சிவலிங்கங்களும், சந்திரன், சூரியன் ஆகியோர் இருப்பதால் நவக்கிரகங்கள் தனியாக இடம்பெறவில்லை .
மொத்தத்தில் பண்டைய சிற்பக் கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவிலின் ஒவ்வொரு தூணும் ஏதாவது ஒரு அழகிய சிற்பத்தை தாங்கியோ, அல்லது கலை நுணுக்கத்தோடோ...விளங்குகிறது.சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சிற்ப கலைக்கூடம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நவகைலாயங்களில் முதன்மையான பிரம்ம தேசம் சென்று தாயார் பிரஹந்நாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதரை தரிசிப்பதுடன், சிற்பங்களையும் பார்த்து ரசித்து வாருங்கள்.
(கூடுதல் தகவல் :இத்தலத்திற்கு தாங்கள் செல்லவில்லை என்றாலும் இக்கோபுரத்தை அடிக்கடி தொலைக்காட்சியில் தரிசித்து இருப்பீர்கள். திருமதி. ராதிகா சரத்குமார் அவர்களின் அண்ணாமலை தொடரில் டைட்டில் பாடலில் வரும் கோயில் கோபுரம் பிரம்மதேச திருக்கோயிலின் கோபுரமே ..)
தி.வள்ளி
திருநெல்வேலி.