திருவாரூரில் இடைவிடாத கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சம்பா பயிர்கள் சேதம்

திருவாரூரில் இடைவிடாத கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சம்பா பயிர்கள் சேதம்



திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, விளை நிலங்களையும் மழைநீர் சூழ்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (அக்.20) காலை 6 மணி தொடங்கி தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலான நேரத்தில் திருவாரூர் 69 மி.மீ, நன்னிலம் 23.2 மி.மீ , குடவாசல் 62.8 மி.மீ, வலங்கைமான் 36 மி.மீ , மன்னார்குடி 30 மி.மீ , நீடாமங்கலம் 49.4. மி.மீ, பாண்டவையாறு தலைப்பு 43.6 மி.மீ, திருத்துறைப்பூண்டி 36.8 மி.மீ, முத்துப்பேட்டை 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


திருவாரூர் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க, செல்பி, வீடியோ எடுக்க வேண்டாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச் சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிலான இளம் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதுபோல், குடவாசல் வட்டம் பெருமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள குடிசைப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதுபோல் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வருகிறது.


மேலும், மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் புறப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடை இயந்திரங்களை வயலில் இறக்க முடியாத சூழலில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் பயிர்கள் சாய்ந்து சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%