வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆற்றின் வழியே கடந்து செல்லும் உபரிநீர்.
ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. உபரி நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியே வெளியேற்றப் பட்டு வருவதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லை பெரியாறு மற்றும் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வராக நதி, சுருளி ஆறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஆகவே கடந்த 18ம் தேதி ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நீர்மட்டம் நேற்று (அக்.20) 69 அடியாக உயர்ந்தது. 71 அடி வரை நீர் தேக்கலாம் என்றாலும், அதிகப் படியான நீர் வந்து கொண்டிருந்ததால் உபரி நீரை அப்படியே வெளியேற்ற நீர்வளத் துறையினர் முடிவு செய்தனர். இதற்காக மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் உள்ள அபாய சங்கு மூன்று முறை பலமாக ஒலிக்கப்பட்டது. பின்பு பெரிய, சிறிய மதகுகளின் வழியே 5 ஆயிரத்து 635 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பூங்காவில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இப்பகுதியை கடக்க தடை விதிக்கப்பட்டது.
அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் நீர்வரத்து இன்று காலை 6.30 மணிக்கு 4 ஆயிரத்து 875 கனஅடியாக இருந்தது. மழை நேரம் என்பதால் அலுவலர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை நீரை அளவீடு செய்து வருகின்றனர். இதன்படி இன்று காலை 10 மணிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 630 கனஅடியாக இருந்தது.
மூன்றாவது எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வைகை அணையின் பெரிய மதகுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு சீறிப்பாய்ந்து வெளியேறும் நீர்.
நீர்வரத்துக்கு ஏற்ப வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்ஃபி, புகைப்படம், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நீர்மட்டம் 69.15 அடியாகவும் (மொத்த அளவு 71). விநாடிக்கு 3 ஆயிரத்து 630 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்த நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் வழியே ஆயிரத்து 280 கனஅடி நீரும், ஆற்றில் 2 ஆயிரத்து 281 கனஅடியும், குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி நீரும் சென்று கொண்டிருக்கின்றன.