திறமையான இந்தியர்களால் அமெரிக்கா சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது: எலான் மஸ்க்
எச்1–பி விசா வழங்குவதை நிறுத்தக்கூடாது என பேட்டி
நியூயார்க்,
அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார். அவருடன் அண்மையில் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் உரையாடி இருந்தார். இந்த பேட்டி உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இதில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள், அமெரிக்க குடியேற்ற விதிகள் மற்றும் தனது குடும்பம் குறித்தும் மஸ்க் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;-
அமெரிக்காவில் குடியேறிய திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது. அதாவது இந்திய திறமையின் மிகப்பெரிய பயனாளியாக அமெரிக்கா இருந்துள்ளது.
எல்லை பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றத்தை நிச்சயம் தடுத்தாக வேண்டும். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகத்தில் எல்லை கட்டுப்பாடுகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. எல்லையில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கும். அதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் அமெரிக்க குடிமக்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை.
நிச்சயம் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது என்பதை எனது நேரடி அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். அவர்களை கண்டறிவது பெரிய சவாலாக உள்ளது.
அந்த வெற்றிடத்தை வெளிநாட்டில் இருந்து குடியேறுபவர்கள் நிரப்புகிறார்கள்.
எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை நாங்கள் உலகில் உள்ள திறமைசாலிகளை கண்டறிந்து பயன்படுத்த விரும்புகிறோம். தொழில்முனைவோர் எப்போதும் கடுமையாக உழைக்க வேண்டும். தோல்விகளுக்கு தயாராக இருக்க வேண்டும். புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் ரசிகன் நான். எனவே, பெரிதாக சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்களை நான் மதிக்கிறேன்.
திறமைசாலிகள் தேவை
எனது நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் திறன் கொண்ட நபர்களுக்கு சராசரிக்கும் கூடுதலான ஊதியத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில் சில நிறுவனங்கள் எச்1–பி விசாவை தவறாக பயன்படுத்துகின்றன. அது மோசமான போக்கு. அதை நிச்சயம் தடுத்தாக வேண்டும். ஆனால், அதற்காக எச்1–பி விசா வழங்குவதையே நிறுத்த வேண்டும் என சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில் இங்கு திறமைசாலிகளுக்கு தேவை உள்ளது.சமூகத்திற்கு பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருப்பது சிறந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்ற பெயரை சூட்டியுள்ளோம். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரை அவரது பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட்டனர்.
ஷிவோன் ஜிலிஸின் முன்னோர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அது எப்படி என்று எனக்கு தெரியாது. அதனால் இந்த பெயரை வைத்தோம் என அவர் தெரிவித்தார்.
1983-ல் நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தனது மகனுக்கு மஸ்க் சூட்டியுள்ளார்.