தீபாவளி ஜவுளி

தீபாவளி ஜவுளி


 சரஸ்வதி வழக்கம்போல கோவிலருகில் பல வித விளக்குகள், சின்ன மண் சாமான்கள் ,எண்ணை பாக்கெட்கள் ,விற்பனை செய்யும் கடையை எடுத்து வைத்து அமர்ந்தாள். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது வேறு அவளை கிலி கொள்ள செய்தது.. 


காலையில் இரண்டு பையனையும் ஸ்கூலுக்கு கிளப்பிவிடும்போதே .. 

"அம்மா .. நாம எப்பம்மா தீபாவளி ஜவுளி எடுப்போம்..? ஸ்கூல்ல எல்லோரும் அது பத்திதான் பேசறாங்க? ", சின்னவன் கேட்க,


" நீ ஏன்டா எடுக்கலன்னு சொல்ற.. எடுத்துட்டோமேனு‌ பீலா வுடு.. அவ்வளவுதான். நான் அப்படிதான் சொல்லிடுறது.. அம்மா எங்கடா போவாங்க பணத்துக்கு.. அப்பாக்கு சம்பாரிக்கிறதை டாஸ்மாக்ல குடுக்கதான் தெரியும்.. ", பெரிய மனுஷி மாதிரி 5 ம் வகுப்பு படிக்கும் பிரதாப் சொல்ல .. 3ம் வகுப்பு ஹரீஷ்.. 

" பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்பா.. நான் எடுக்கலன்னுதான் சொல்வேன்"


அவர்தள் இருவரும் கைகோர்த்து பள்ளிக்கு செல்வதை கண்ணீர் மல்க பார்த்த சரஸ்வதிக்கு மனசு என்னவோ பண்ணியது.. 


காலையில் ஜட்ஜ் வீட்டம்மா வீட்டுல மட்டும் வீட்டு வேலை செய்றது வழக்கம்.. 6 மணிக்கெல்லாம் போய் 1 மணி நேரத்துல வேலையமுடிச்சிட்டு வந்துடுவா.. தங்கமான மனசுக்காரங்க.. 


அவங்கதான் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுறாங்க.. சம்பளமும் குறை வைக்கமாட்டாங்க.. தீபாவளிக்கு அவங்க குடுத்த போனஸ் காசைதான் புருஷங்காரன் இவளுக்கு தெரியாம தூக்கிட்டு போய் தண்ணியடிச்சிட்டு வந்துட்டான்.. பிறகு அழுது என்ன புண்ணியம்..? 


 வீங்கிய முகத்தை பார்த்து ஜடஜம்மா கேட்க?.. எப்படி அவரிடம் சொல்றது.. வழியில ஜேப்படி பண்ணிட்டாங்கன்னு பொய்சொல்லிட்டா சரஸ்வதி.. 


"அடப்பாவமே! ",என்று மறுபடி ஒரு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார் அவர். வாங்கவே கூசியது இவளுக்கு.. 


"தாலி கட்டுவன் தூக்குறது திருட்டு .. ஜேப்படி இல்லை! ", அந்தம்மா சொல்ல.. கண்ணீர் வழிய நின்றாள், இவள். 


"பாரு சரஸ்வதி! தெய்வம்தான் எல்லோருக்கும் துணை! நான் சொல்றதுக்கு வேற ஒன்னும் இல்ல..! கவனமா இரு.." 


அவர் வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்க..தன் கடையிலிருந்து இரண்டு பெரிய அகல் விளக்குகளாக எடுத்தாள் .. ஒரு நெய் பாக்கெட், திருநூல் தீப்பெட்டி எடுத்துக்கொண்டு, பக்கத்து பூக்கடை ஆயாவிடம் கடைய பாத்துக்க சொல்லிட்டு விடுவிடுன்னு கோவிலுக்குள் போனாள்.. 


 பிரகாரத்தில் விளக்குகளை ஏற்றியவள்,உள்ளே கர்ப்பகிருகத்தில் காசி விசாலாட்சி அலங்காரத்தில் அம்மன் ஜொலித்துக்கொண்டிருந்ததை மெய்மறந்து பார்த்தாள்.. அப்படியே

மனதிலிருந்ததை அம்பிகையிடம் கொட்டி.. வெளியே வந்து தூணருகில் அமர்ந்தாள்.. 


சின்ன விசும்பல் சத்தம் கேட்டது. சற்று‌‌ எட்டி பார்க்க.. நடுத்தர வயசு அம்மா.. சற்று வசதியானவர்தான் போல.. விசும்பலுடன் அழுது கொண்டிருந்தார்.. இவள் பார்க்கவும் சட்டுனு கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து சென்று விட .. அப்போதுதான் தூணருகில் இருந்த கட்டைப்பையை பார்த்தாள்.. புது சரவணா ஸ்டோர் பை.. புது ஜவுளி போலருக்கு.. 


உடனே அதை எடுத்துட்டு இவளும் பிரகாரம் நோக்கி ஓட..அவரை பிடிக்க முடியல.. ஆனால் அதற்குள் அந்தம்மா காரில் ஏறிவிட்டார்.. இவள் அம்மா அம்மா என்று கையாட்டிக்கொண்டு காரைத்துரத்த.. டிரைவர் ரிவர்வியூ கண்ணாடியில் பார்த்து வண்டியை நிப்பாட்ட.. அந்தம்மா கார் கண்ணாடியை இறக்கினார்.. 


இவளை பார்த்து புருவம்‌ உயர்த்த.. "கூப்புட்டு வேற காசு கேப்பீங்களா?" என்று கடுப்படிக்க.. 


தன்னை நொந்தவாறே.. அந்த பையை அவரிடம் நீட்டினாள் சரஸாவதி.. இவர் முகம்மாறி யது, காரை விட்டு இறங்கினார். 


 கைநீட்டி வாங்கிக்கொண்டவர்..

"தப்பா எடுத்துக்காதம்மா..ஏதோ மனசு சரியில்லை..என்ன பன்ற நீ? "என கேட்க..


அவள் தன் கடையை நோக்கி கைகாட்டினாள்..


இவர் உடனே ,

"எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவியா..வெள்ளி செவ்வாய் தொடர்ந்து இரண்டு மாசம் ,இந்த அம்மனுக்கு ராகுகாலத்துல விளக்கேத்திறியா..?


 இவள் குழப்பத்துடன் பார்க்க..

அவர் இரு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார்..

"வெச்சிக்க..நீ செய்வேன்னு‌ என் மனசுக்கு தோணுது..வீட்டை விட்டு என் பையன், மருமவ குழந்தைகளோட போயிட்டான்..அப்பாக்கும் புள்ளைக்கும் வாக்குவாதம்..மனசு கேட்காம, தீபாவளிக்கு இந்த ட்ரெஸ்ச பேரப்பிள்ளைகளுக்கு எடுத்து போய் நான் குடுத்தத கூட என் மகன் வேண்டான்னு அனுப்பிட்டான்..நானும் என் வீட்டுக்காரருக்கு டிரான்ஸ்ஃபர் வந்ததால அவர் கூடவெளியூர் போறேன்..இரண்டு வாரம் விளக்கு போட்டுட்டேன்.மீதிய நீ செய்றியா?, என்று கேட்க..


சற்று பாவமாகியது இவளுக்கு..காசு பணம் இருந்தாலும் ..கஷ்டம் எல்லோருக்கும் ஒன்னுதான் போல என்று எண்ணியபடி அதை வாங்கிக்கொண்டாள்..


"சரிங்கம்மா..நிச்சயம் விளக்குப்போட்டு , உங்களுக்காக வேண்டிக்கிறேன்..சீக்கிரம் புள்ளை கூட சேந்துடுவீங்கம்மா!"


 அவர் முகம் மலர்ந்தது.." ஏம்மா இதுல சின்னபிள்ளைங்க டிரெஸ் இருக்கு..உன் பிள்ளைங்களுக்கு பத்திச்சினா நீ எடுத்துக்க..இல்ல தேவைப்படுறவங்களுக்கு குடுத்துடு..!", என்று அந்த கட்டைப்பையை இவளிடமே கொடுத்தவர்,


"மன சஞ்சலத்தோட கிளம்பினேன் கோவிலில் இருந்து.இப்ப மனசு சாந்தமாகிட்டு", என்று கோபுரத்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டு காரில் ஏறிப்போய்விட,


சரஸ்வதி கடையில் வந்து அமர்ந்தாள்..அந்த பையிலிருந்த அந்த ஆடைகளை எடுக்க ஏதோ சொல்லி எடுத்தாற்போல இவள் இரண்டு பையனுக்கும் அளவு பொருத்தமா இருந்தது..விலையும் அதிகமான துணி..பிள்ளைகள் சந்தோஷமாய் பட்டாசுடன் தீபாவளியை கொண்டாடுவது கண் முன் தொன்றிட,


மனம் நெகிழ்ந்து போய் கோபுரத்தை நோக்கி கை கூப்பினாள்..

"என் புருசனையும் எப்படியும் நீ திருத்தி மனுசனாக்கிடு அம்மா.."


உள்ளே வீற்றிருந்த அவள் புவனம் மலர்ந்திருந்தது..அனைத்தையும் நடத்துவது அவள்தானே.அது அதற்கான நேரம் வரும்போது நல்லபடி நடத்திட மாட்டாளா என்ன ?


முற்றும்..


தஞ்சை பியூட்டிஷியன்

உமாதேவி சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%