தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை
Sep 17 2025
38

சென்னை:
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக். 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட்டைப் பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஆக.17 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.
குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. காத்திருப்போர் பட்டியலும் முடிந்து “ரெக்ரெட்” என்று காட்டியது. இதேபோல, மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சேரன், நீலகிரி உள்ளிட்ட ரயில்களிலும், பகலில் இயக்கப்படும் வைகை, பல்லவன் விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் எண்ணிக்கை நீண்டது.
ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 82 சதவீதத்துக்கும் மேல் இணையதளம் வாயிலாகவும், மீதமுள்ள டிக்கெட் முன்பதிவு ரயில் நிலைய கவுன்ட்டர்கள் மூலமாகவும் நடைபெற்றது. குறிப்பாக, முன்பதிவு டிக்கெட் பெற ரயில் நிலையத்தில் உள்ள கவுன்ட்டர்களில் அதிகாலை முதல் நெடுநேரம் காத்திருந்த பயணிகள், டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, மக்கள் சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பண்டிகை சிறப்பு ரயில்களை தாமதமாக அறிவித்தால், பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க திட்டமிடுவது கடினமாகிறது. அதாவது, ரயில்களில் கூட்ட நெரிசலும், அதிக கட்டணம் செலுத்தும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக, சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் முன்னதாகவே அறிவிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?