துபாய் ‘ஏர் ஷோ’வில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து - விமானி உயிரிழப்பு
Nov 22 2025
22
புதுடெல்லி: துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமான கண்காட்சி 2025 தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான இன்று (நவ.21) இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர்.
இந்நிலையில், தேஜாஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய விமானப் படை, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில், ‘துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான் கண்காட்சியின்போது இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
உயிரிழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் தேஜாஸ் லகு ரக போர் விமானம் முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. இந்நிலையில், தற்போது துபாயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதன் வீடியா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானமான தேஜாஸ், தனது முதல் விமானத்தை கடந்த 2001, ஜனவரி 4-ம் தேதி இயக்கியது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த உள்நாட்டுப் போர் விமானத்துக்கு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ‘தேஜாஸ்’ என பெயரிட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?