நகர்கிறது காட்சிகள்

நகர்கிறது காட்சிகள்

நகர்கிறது காட்சிகள். வீடுகளாய்,வீதிகளாய்,

கடைகளாய்,

நிறுவனங்களாய் மண்ணாய்.மனிதர்களாய் 

உயிர் கொண்ட அசைவாய்!


கத்தரிச்செடி முளைத்து விட்டிருந்ததாய்!


வெண்டை தனது பிஞ்சிலை காட்டி துளிர் விட்டிருந்ததாய்!


அவரை நட்டு வைத்த நாளில் முளைவிட்ட ஆசையை பூர்த்தி செய்யுமா தெரியவில்லை.


படர்ந்தவையும்,

பந்தலிட்டிருந்தவையும் 

நட்டவைகளுடன் கைகோர்த்து பொய்த்துப்போக காய்வைத்த வெண்டை மட்டும் கணிசமாய் நம்பிக்கை தந்தது.


வீட்டைச்சுற்றி தடம் கொண்ட நினைவுகள் மழலையாய் மடியேறி!


ஆங்கோர் கடையில் 

தேநீர் ஆற்றியவன் அதன் சுவையை காற்றில் அனுப்பித்தருகிறான்.


நாவின் சுவையறும்புகள் படர்ந்து உள்ளிறங்குகிற ஒவ்வொரு மிடரையும் 

சுகித்தருந்துகிற வேளை 

உயர் ஆசி வழங்கப்பட்டவனாய்!


தண்ணீர் சுமந்து ஓடுகிற ட்ராக்டர்கள் 

தெருக்களில் குடம் நிறைத்தன.


பக்கவாட்டுச்சுவர் காட்டிய திரையரங்கின் நாயக நாயகர்கள்

நீள் தூக்கம் கொண்டு!


இன்னமும் திறந்திறாத

பணிமனை முன் வரிசை குலைந்து நிற்க வைக்கப்பட்டிருந்த 

இருசக்கர வாகனங்கள்.


குடோனிலிருந்து மிதந்த வந்த சாம்பிராணி வாசனை.


பால்டிப்போவின் முன்பாக

கேன்களும் இருசக்கர வாகனங்களும்!


வீடுகளின் காலை நேர துரிதம்.


வீதிகளின் துப்புரவு பட்டிருந்த ஒழுங்கு.


வரையப்பட்டிருந்த கோலங்களும்,

தூறலின் ஈரமாய் தெளிக்கப்பட்டிருந்த தண்ணீரும்!


பாதையோரமாய் போக்கு காட்டி ஓடுகிற புங்க மரத்து அணில்.


காட்சிகளை உள்வாங்கியவனாய் ரயிலினுள்ளிருந்து நான்!



-விமலன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%