நவராத்திரி, அம்பிகைக்கு உரிய ஒன்பது நாட்கள் ஆகும். ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகள் உள்ளன, இதில் இலையுதிர் காலத்தில் வரும் ஷரத் நவராத்திரி மிகவும் பிரபலமானது. இது மகாநவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. நவராத்திரி திருவிழா 9 இரவுகள் நீடிக்கும், ஒவ்வொரு இரவும், பக்தர்கள் தேவியின் வெவ்வேறு வடிவத்தை வழிபடுகிறார்கள். 10ம் தேதி விஜயதசமியுடன் திருவிழா நிறைவடைகிறது.
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது?
நவராத்திரி என்பது தீமையின் மீதான நன்மையின் வெற்றி ஆகும். புராணக் கதை துர்கா தேவிக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனுக்கும் இடையே நடக்கும் போராக இதை வடிவமைக்கிறது. மகிஷாசுரன் கடவுளும் மனிதனும் கொல்ல முடியாத வரம் பெற்றான். வரத்தால் உற்சாகமடைந்த அவன், சொர்க்கத்தைத் தாக்கி, தேவர்களை வென்றான். அந்த அரக்கனைக் கொல்லத் தங்கள் தெய்வீக ஆயுதங்களையும் கொடுத்த அனைத்து கடவுள்களின் ஆற்றல்களின் கலவையிலிருந்து துர்கா உருவானாள்.இந்த கதையில் கூறப்படும் அசுரன் என்பது நமக்குள் இருக்கும் பேராசை, பெருமை, அகங்காரம், ஆணவம், பொறாமை, கோபம், காமம் போன்ற தீய போக்குகளை பிரதிபலிக்கிறது. தேவியிடம் சரணடைவதன் மூலம் மட்டுமே அவற்றைக் கடக்க /அடக்க முடியும்.
*அம்பிகை வழிபாடு:*
ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரையும் வழிபடவேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. நவராத்திரியின்போது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்கும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரைப் பூஜிக்கிறோம்.
முதல் மூன்று நாட்கள்
துர்க்கை:
மகேஸ்வரி, கௌமாரி, வராக
*முதல் நாள் மகேசுவரி:*
முதல் நாள் மதுகைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய தேவியை அபயம், வரதம், புத்தகம், அக்கமாலை ஆகியவற்றைக் கொண்ட கரங்களோடு குமரி வடிவமாக அலங்கரிப்பார்கள். இந்த வடிவத்தின் திருநாமம் மகேஸ்வரி. துர்கை அன்னையை மகேச்வரியாக பாவித்து வணங்குதல் வேண்டும். மல்லிகை மற்றும் வில்வம் முதன்மையாக பூஜை செய்ய பயன்படுத்தப்படுகின்றன.இந்த நாளுக்கான பிரசாதமாக வெண் பொங்கல் மற்றும் காராமணி சுண்டல் செய்யலாம்.
*இரண்டாம் நாள் கௌமாரி:*
இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் அம்பிகையை வணங்க வேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கொண்டவள். முருகப்பெருமானின் அம்சத்திற்கு ஆதாரமானவள்.அகங்கார சொரூபம் கொண்டவள்.அழகிற்கும், வீரத்திற்கும் உரியவள்.அடியாருக்கு வேண்டும் வரம் அளிப்பவள்.இந்த அன்னைக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து, புளியோதரை நிவேதனம் செய்யலாம்.
*மூன்றாம் நாள் வராகி:*
மூன்றாம் நாள் அன்று அம்பிகையை வராகி அம்சத்தில் வழிபட வேண்டும். இந்த அன்னை வராஹ(பன்றி) முகமும் தெத்துப் பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப் பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இந்த அன்னைக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் மற்றும் தயிர் சாதம் படைத்து வழிபடலாம்.
*லட்சுமி :*
மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி
*நான்காம் நாள் மகாலட்சுமி*
நான்காம் நாள் அம்பிகை மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் இந்த அன்னை ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். அளவில்லாதப் பேரழகும் ஆற்றலும் கொண்ட இவளை வணங்க பாவத்தை அழித்து, இன்பத்தை அளிக்கக் கூடியவள்.மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். தயிர் சாதமும் உளுந்துவடையும் வைத்து படைப்பர், லட்சுமிக்கு உகந்த உணவு என்பதால், மற்ற உணவுகளைவிட இது கட்டாயம் இடம் பெறுதல் வேண்டும். கூடுதலாக அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் போன்ற இனிப்பு வகைகளை வைத்து படைக்கவும் செய்யலாம். கற்கண்டு அல்லது கருப்பட்டி பொங்கலும்கூட செய்யலாம்.
*ஐந்தாம் நாள் வைஷ்ணவி :*
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. நவராத்திரியின் 5 வது நாளில் அம்பிகையின் நாமம், வைஷ்ணவி அல்லது மோகினி. விஷ்ணுவின் தர்ம பத்தினியான லட்சுமியை வைஷ்ணவி என்ற பெயரில் இந்த நாளில் வழிபடுகிறோம். இந்த அம்பாள், மகாவிஷ்ணுவை போல் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறாள்.முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதம் படத்து வணங்கலாம்.
*ஆறாம் நாள் இந்திராணி:*
நலம் அருளும் நவராத்திரியின் ஆறாம் நாள் திருமகளுக்கு உரியது.ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு தாமரை மலர் மீது அமர்ந்த செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை இந்திராணி வடிவில் போற்றும் நாள் இன்று. முருகனுக்கு உரிய சஷ்டி நாள் என்பதால் முருகப்பெருமானின் அம்சமான சப்த மாதர்களில் ஒருவரான கௌமாரியையும் இந்த நாளில் திருமகளாக எண்ணி வழிபடுவதும் உண்டு ஜாதி மலரை வைத்து பூஜை செய்யலாம்.
சரஸ்வதி : சாம்பவி, நரசிம்ஹி, சாமுண்டி
*ஏழாம் நாள் சரஸ்வதி:*
சரஸ்வதி தேவியின் ஒரு ரூபமான சாம்பவி தேவியை தான் நவராத்திரியின் 7 ஆம் நாளில் வழிபடுகிறோம். இந்த சாம்பவி தேவி நமக்கு ஞானத்தை தரக் கூடியவளாக விளங்குகிறாள். அறிவின் முதிர்ச்சியே ஞானம் என்கிறோம். ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம். அம்பிகையை இந்த நாளில் சரஸ்வதி தேவி, சாம்பவி தேவி, காளராத்ரி, பிராமி ஆகிய பெயர்களிலும் நாம் வழிபடுகிறோம்.
*எட்டாம் நாள் நரசிம்ஹி:*
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட இந்த அன்னையின் அருள்வேண்டும். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி வழிபாடு செய்யலாம். இன்று அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
*ஒன்பதாம் நாள் சாமுண்டி:*
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. அம்பு, வில், அங்குசம் மற்றும் சோளம் ஆகியவற்றால் அவளை லலிதா பரமேஸ்வரி வடிவில் அலங்கரிக்கலாம். இன்று தாமரை மற்றும் மரிக்கொழுந்து வைத்து பூஜை செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. நைவேத்தியமாக எள்ளு சாதம், கொண்ட கடலை சுண்டல் அல்லது அக்கரவடிசல் வழங்கலாம்.
இத்துடன் நித்தம் ஒரு சுண்டலால் நிவேதனம் செய்து நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி, அவற்றின் நன்மைகளையும் பெறலாம்.
தொகுத்து அளித்தவர்
K .கணேசன்
திருச்சி