நவ.27-ல் புயல் உருவாக வாய்ப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் நவ.30 வரை கனமழை வாய்ப்பு
சென்னை: இந்திய கடல் பகுதிகளில் 3 காற்று சுழற்சிகள் நிலவுகின்றன. அந்தமான் பகுதியிருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி நவ.27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.30-ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக செனனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பை ஏற்படுத்தி வருகின்றன. இவை ஒன்றாக இணைந்து கூட நகர வாய்ப்புள்ளது. இவற்றின் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று (நவ.25) ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 26, 27 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 28-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 29-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 30-ம் தேதி வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?