பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சாலைப் பணிகளை அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சாலைப் பணிகளை அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை, செப்.25–-


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே சாலைப்பணிகளை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழக அரசு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கி உள்ளது. மழை எவ்வளவு பெய்தாலும், மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.


மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது வருகிற சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கி உள்ளன. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு மழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.


அதன்படி முன்னெச்சரிக்கை பணி கள் விவரம் வருமாறு:-


* மழை நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு வசதியாக மழை நீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி வைக்க வேண்டும்.


* நீர்நிலைகள் மற்றும் கால்வாய் களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக், மணல் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.


* சாலைகளில் தோண்டப்பட்ட அனைத்து பள்ளங்களும் மூடப்பட வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும். அனைத்து சாலை பணிகளையும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.


* மழைக்கு சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதனை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.மழைக்கு விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை முன்பே கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர் மூலம் அகற்ற வேண்டும்.


* பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய சாலைகள், ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.


* மழைக்காலத்தில் குடிநீர் வினியோகம் தடைபடக் கூடாது. சீரான வினியோகம் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.


* நீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முடிக்க வேண்டும். அதே வேளையில் இந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.


* வார்டு வாரியாக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தை தேர்வு செய்து வைத்து கொள்ள வேண்டும்.


* கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு அதனால் வரும் நோய்களை முற்றிலும் தடுக்க வேண்டும்.


* நகர்ப்புற சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும்.


* மின்சாரத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.


இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%