"அத்தை, நான் கொஞ்சம் கடைக்கு போய்ட்டு காய்கறி வாங்கிட்டு வந்திடறேன். ஒங்கப் பேத்தி மது பள்ளிக்கூடத்திலேந்து வந்ததும் அவளுக்கு கொஞ்சம் டீ போட்டுக் குடுங்க" என்றாள் மாலதி.
"சரி சரி, போய்ட்டு வா, டிகாஷன் இல்லியா காப்பிக்கு? அத்தை மரகதம் கேட்டார்.
"இல்ல அத்தை, காலைல போட்டுக்கலாம்" என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் மாலதி.
மரகதம் சென்னையில் மகளோடு வசிக்கிறாள். மகள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், சமைப்பதும் போன்ற வீட்டு வேலைகள் செய்வது உலக அதிசயம். மகளுடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வதில்தான் அவளுக்கு திருப்தி.
எப்போதாவது இங்கு மகன் வீட்டிற்கு வருவாள். ஒரு மாதம் கூட தங்க மாட்டாள்.
பங்களூரு பிடித்திருந்தாலும் மகளை விட்டு வர மனமிருக்காது.
பேத்தி வருவதற்குள் கதவை தாளிட்டுவிட்டு வந்த மரகதம் மெல்ல சமையலறையில் நோட்டம் விட்டாள்.
மளிகை சாமான்கள், பிரிட்ஜில் இருக்கும் ஸ்நாக்ஸ் என்று நோட்டம் விட்டு புதிதாக வாங்கியிருக்கும் குட்டிக் குக்கரையும் பார்த்து, இது தேவைதானா என்று யோசித்தாள்.
மருமகள் மிகவும் நல்லவள். சிக்கனம். மகனை நன்கு கவனித்து கொள்கிறாள் என்பதால் கோபித்துக் கொள்வதோ, குற்றம் சொல்வதோ இல்லை.
மிக்ஸிக்கு பின்னால் ஒரு டம்ளரில் கருப்பாய் திக்காக ஏதோ ஒரு திரவம் குட்டித் தட்டுப் போட்டு மூடியிருந்ததை கவனித்தாள்.
டிகாஷன் இருக்கே! ஏன் இல்லைனு சொன்னாள் மாலதி என்று யோசித்தாள்.
தான் வந்ததும் காபி கலந்து குடிப்பதற்காக ஒளித்து வைத்திருக்கிறாள் என்று நினைத்தாள்.
காலிங் பெல் சத்தம் கேட்டதும் போய்க் கதவைத் திறந்தாள். பேத்தி மது வந்து விட்டாள்.
"அம்மா எங்கப் பாட்டி" கேட்டாள் பேத்தி மது.
"ஒங்கம்மா காய் வாங்க மார்க்கெட்டுக்கு போயிருக்கா. நீ உடுப்பு மாத்திட்டு வாமா. காபி போட்டுத் தரேன்" என்றார் மரகதம்.
"இல்ல பாட்டி, எனக்கு டீ போட்டுத் தாங்களேன்" என்றாள் மது.
"இல்ல இல்ல காபியே போட்டுத் தரேன். ஒங்கம்மா டிகாஷன் வச்சுட்டுப் போயிருக்கா. ஒனக்கு காபியே தறேன். ஒங்கம்மா வந்து டீ போட்டுக் குடிக்கட்டும்" என்ற பாட்டியிடம் மது ஓகே சொன்னாள்.
பாலைக்காய்ச்சி அந்த டம்ளரில் இருந்த டிகாஷனை! கொஞ்சம் ஊற்றி காப்பி கலந்து கொடுத்தாள்.
மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். மருமகள் ஒளித்து வைத்த டிகாஷனைக் கண்டுபிடித்த பெருமை.
"பாட்டீஈஈஈ என்ன பாட்டி காபி இது?"
"ஏம்மா காபிதான். என்னாச்சு கண்ணு?" என்றார் மரகதம்.
"ரொம்ப இனிக்குது பாட்டி, கொஞ்சம் டிகாஷன் விடுங்க" என்றாள் மது.
பாட்டி அந்த டம்ளரில் இருந்த டிகாஷனில்! இன்னும் கொஞ்சம் ஊற்றினாள்.
இப்போது குடித்த மது "போங்கப் பாட்டி, ரொம்ப ரொம்ப இனிக்குது, எனக்கு காபியே வேண்டாம்" என்று காபியைக் கொட்டி விட்டாள்.
"என்ன திமிரு பாரு, காபிய கொட்டிட்டியே. என்ன வளர்த்து வச்சிருக்கா பொம்பளைப் பிள்ளையை?" என்று கத்தினாள்.
"பாட்டி அம்மாவ எதுவும் சொல்லாதீங்க. நிஜமாவே நீங்க குடுத்த காபி ரொம்ப இனிப்பு. என்னால குடிக்க முடியல" என்றாள் மது.
இந்த அமர்க்களத்தில் உள்ளே வந்தாள் மாலதி. "என்னாச்சு மது? எதுக்குக் கத்திக்கிட்டு இருக்க?" கேட்டாள் மாலதி.
"அதான் நீ ஒளிச்சு வச்சிருந்தியே டிகாஷன் அதுல காப்பி கலந்துக் கொடுத்தேன். எப்போதும் போடற மாதிரிதான் சர்க்கரையும் போட்டேன். ரொம்ப இனிப்பா இருக்குனு சொல்லி காப்பியக் கொட்டிட்டா. எவ்வளவு திமிரு?" மரகதம் சொல்ல சொல்ல மாலதிக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
மகளைக் கட்டிக்கொண்டு, முதுகை தடவிக் கொடுத்தாள். "அத்தை அது டிகாஷன் இல்லை, வெல்லப் பாகு. காலம்பற பாயசத்துல கொஞ்சம் அதிகம்னு எடுத்து வச்சேன். அதை டிகாஷன்னு... " மாலதி முடிப்பதற்குள் மது பாட்டியைப் பார்த்தாள்.
பாட்டி பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்று மூவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தாள். சில நிமிட அமைதிக்குப் பின் மூவருமே கொல்லென்று சிரித்தார்கள்.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்.