ஒவ்வொரு ஆண்டு குழந்தைகள் தினத்தை கொண்டாடி குழந்தைகளுக்கு இனிப்புகளும் அவர்களுக்கு பிடித்த பரிசுகளையும் வழங்குகிறோம். குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை கண்டு நடத்தி அவர்களை மகிழ்விக்கிறோம். ஒரே ஒரு நாள் குழந்தைகளை கொண்டாடிவிட்டு நல்லதொரு எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியாது. குழந்தைகளுக்கு உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது நாளிதழ்களில் பாலியல் துன்பப்படுத்திய ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக செய்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.
எதிர்ப்பு காட்ட தெரியாதவர்கள், விவரம் அறியாதவர்கள் மற்றும் இயலாதவர்கள் ஆகியோருக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகள் கொடூரமானவை. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் அவை அதிகமாக ஆசிரியர்களால் நடைபெறுகிறது என்பது மன்னிக்க இயலாத குற்றம்.
தனது குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அது குறித்து பீதியிலும் மன உளைச்சலிலும் அவமானத்திலும் ஆட்படுவதாக உளவியல் கூறுகிறது. தேசத்தின் எதிர்கால மனித ஆற்றலை பாதிக்கும் இக்கொடுமையை மற்ற பிரச்சனைகளை போல சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ POCSO வழக்குகளின் எண்ணிக்கை 4581. அதுவே 2024 ஆம் ஆண்டில் ஒன்றரை மடங்கு அதிகமாகி 6975 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 19 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக வழக்குகள் ஆவணங்களின்படி பதியப்பட்டுள்ளன. இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே. குழந்தைகள் வெளியில் சொல்ல பயந்தவை, மிரட்டப்பட்டவை, உள்ளூரில் சமரசம் பேசப்பட்டவை என கணக்கில் வராதவை எண்ணிக்கை இன்னும் பல மடங்கில் இருக்கக்கூடும். மேற்படி குற்றங்கள் பள்ளி வளாகம், வீடுகள்,உறவினர் வீடுகள், விளையாட்டு மைதானம், தற்காப்பு கலை பயிற்சி, நீச்சல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி என பல்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளன.
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஒரு சில வழக்குகளை தவிர பெரும்பாலும் ஆசிரியர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என அந்த குழந்தைக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் தான். தனக்கு நன்கு தெரிந்தவர்களாலேயே தீங்கு விளைவிக்கப்படும் பொழுது அந்த குழந்தையின் நம்பிக்கை முதலில் தகர்ந்து போகிறது. குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் பாதிக்கப்படும் குழந்தை ஏதாவது ஒரு பள்ளியில் பயிலும் குழந்தையாகவே இருக்கிறது. எனவே இந்த சிக்கலை தீர்க்க வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு கல்வித்துறைக்கு தான் அதிகம் உள்ளது.
ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோராக கருதி தங்களது குழந்தைகளை பள்ளியில் பெற்றோர்கள் சேர்க்கின்றனர். அந்த ஆசிரியர்களாலே தங்கள் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்குகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை கடந்த மாதம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக புதிய நெறிமுறைகளை முதல் முறையாக வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தொடக்கநிலை வகுப்புகள் மற்றும் பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை மட்டும் பணி அமர்த்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தை நல செயல்பாட்டாளர்கள் இதை நேர்மறை குறியீடாகவே எடுத்துக் கொள்கின்றனர். துணிந்து புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதே இது காட்டுகின்றது என்கின்றனர். தொலைநோக்கு பார்வையில் இது குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.
காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க தயங்குபவர்களுக்காக 1098 உதவி தொலைபேசியும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் புகார் கொடுக்கலாம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருப்பதே புகார்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்கின்றனர்.
இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. ஓரிரு விஷச்செடிகள் ஒட்டுமொத்த விவசாயத்தையும் பாதிக்கும். ஆகவே தான் தவறு செய்யும் ஆசிரியர்களின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, பணி நீக்கம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மாணவர் புகார் பெட்டி, வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் போன்ற முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கின்றன.
ஒரு சில நிகழ்வுகளில் உள்ளூர் மற்றும் பள்ளிகளுக்கு உள்ள பிரச்சனைகளால் சில ஆசிரியர்கள் மீது வேண்டுமென்றே பாலியல் வழக்குகள் புனையப்படுகின்றன. மாணவர்களே ஒன்று திரண்டு இந்த குற்றச்சாட்டு பொய் என போராடி ஆசிரியர்களை மீட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.
ஊடகங்களில் தண்டனைக்கு உட்படும் ஆசிரியரின் பள்ளி பெயரை வெளியிடும் பொழுது பாதிக்கப்பட்ட குழந்தை யார் என்ற ஆர்வதேடுதலில் சமூகம் இறங்குகிறது. இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும். அதே நேரத்தில் அந்த ஆசிரியர் குற்றமற்றவராக இருந்து அது புனையப்பட்ட புகாராக இருந்தால் அவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுகிறது. ஆகையால் ஒரு ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பொழுது உடனடியாக அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்து பணியில் இருந்து விடுவித்தல் சாலச் சிறந்தது. விசாரணையில் குற்றம் ஓரளவு சாட்சிகளுடன் உண்மை என தெரிந்தால் சட்ட நடவடிக்கை எடுத்து அதன் பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கலாம்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க பாலியல் குற்றவாளியின் இணையர் மற்றும் அவரது குழந்தைகள் எவ்வித தவறும் செய்யாமல் சமுதாயத்தில் மிகப்பெரிய தலைகுனிவை எதிர்கொள்கின்றனர். அவர்கள் எந்த விதமான பொது நிகழ்ச்சிகளிலோ சுப காரியங்களிலோ கலந்து கொள்ள இயல்வதில்லை. பாலியல் குற்றவாளிகளின் குடும்பத்தினர் சந்திக்கும் அவமானங்களை குறும்படமாகவோ அல்லது பேட்டியாகவோ தயாரித்து அதை ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியின் பொழுது விவாத பொருளாக்கினாலே வகுப்பறைகளில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசின் காவல்துறை, சமூக நலத்துறை போன்ற பல்வேறு துறைகள் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் 30 ஆயிரத்துக்கு மேலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு தொடுதல், பழகுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் விழிப்புணர்வு மிகவும் கவனத்தோடு திட்டமிடப்பட வேண்டும். தொடர்ச்சியான மற்றும் சற்று அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தங்களை சுற்றி உள்ள உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் அவர்களுக்கு ஒரு அச்சமும் வெறுப்பும் ஏற்பட்டு அவர்களது தினசரி வாழ்க்கையே சந்தேகம் நிறைந்ததாக அமைந்து விடும். யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்பதிலும் அவர்களுக்கு குழப்பம் ஆகிவிடும்.
குழந்தைகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், தங்களுடன் பயிலும் குழந்தைகளுக்கு ஏதும் துன்புறுத்தல் நேர்ந்தால் அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் போன்ற உள்ளடக்கத்துடன் அவர்களுக்கான வகுப்புகளும் பாடங்களும் அமைய வேண்டும். இந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு இவர்கள் யாருக்கும் பாலியல் துன்புறுத்தல் வழங்காத வண்ணம் நெறியோடு வளர்க்கப்பட்டாலே எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் கண்டிப்பாக குறையும். கொலை,கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் போல இதுவும் மிகப்பெரிய குற்றம்தான் என்பதை அவர்களது மனதில் பதிய வைக்க வேண்டும்.
பாலியல் குற்றங்கள் நடந்த பிறகு விதிக்கப்படும் தண்டனைகளை தமிழ்நாடு அரசு கடுமையாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதைவிட முக்கியமாக குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கல்வித் துறை முன்னெடுப்பாக வடிவமைக்க வேண்டும் என்பது குழந்தை நல ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எவ்வித அச்சுறுத்தலும் இன்றி குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்தை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அனுபவித்து எதிர்காலத்தில் ஆற்றல் மிகுந்த மனித சமுதாயமாக உருவாவதற்கான சூழலை உருவாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.
நாகை பாலா