ஹரணி
மார்கழி மாதத்தில் மட்டும் மனிதர்களுக்கு சுறுசுறுப்பு வந்துவிடும் தெருவுக்குத் தெரு கோயில்களுக்கு வழிபட வந்துவிடுவார்கள். இறைவனை வணங்குவதற்குக் கூட எல்லைகள் வகுக்கவேண்டியுள்ளது. நாள்தோறும் வழிபடுபவர்கள் ஒரு சிலர். குறிப்பிட்ட நாள்களில் மட்டும் கோயிலுக்கு வருபவர்கள் ஒருசிலர். ஒரு சிலர் எப்பவாவது தோன்றும்போது வந்து வழிபடுவார்கள். எல்லாருக்கும் இறைவன் பொதுவானவன்.
அந்தத் தெருவில் ஆனந்தவிநாயகர் கோயிலில் வழிபாடு முடிந்து பிரசாதம் வழங்கத் தொடங்கியிருந்தார்கள்.
காற்றுக்காக குருக்கள் வெளியே வந்து நின்று தெருவில் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்தபடியும்.. போப்பா.. போய் பிரசாதம் வாங்கிக்க என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒவ்வொருத்தரும் முண்டிக்கொண்டு பிரசாதத்தை வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் நாலைந்து தட்டுகள் வாங்கினார்கள்.
ஒரு கையில் இரண்டும் இன்னொரு கையில் இரண்டுமாக வாங்கிக்கொண்டு போனார்கள்.
ஒருத்தர் சொன்னார் இது என்ன பிரசாதமா? காலை டிபனா என்றார்?
இப்படித்தான் பண்றாங்க.. என்ன பண்ணமுடியும்? ஒருத்தரே இத்தனை வாங்கிட்டுப்போனா வர்றவங்களுக்கு என்ன கிடைக்கும் ? என்று.
விடுங்க.. அவங்க தெருக்காரங்க.. கேட்டா பிரச்சினை வந்துடும் என்றார்..
குருக்கள் எதுவும் பேசாமல் சிரித்தபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அதற்குள் இரண்டு பேருக்குள் சண்டை வந்துவிட்டது. ஒருவரை விட ஒருவர் அதிக தட்டுகளை வாங்கியதுதான் பிரச்சினை.
எங்க ஊட்டுக்காரருக்கு இன்னிக்கு உடம்பு சரியில்ல.. அதனால அவருக்கும் சேர்த்து பிரசாதம் வாங்க வந்தேன்.. இந்தம்மா சண்டைக்கு வருது.. நான் இன்னிக்குத்தான் கூடுதலா வாங்குனேன்.. இந்தம்மா இதே வேளையா தினமும் நாலஞ்சு வாங்கிட்டுப்போவுது.. இந்த மார்கழி மாசம் முழுக்க இது காலை டிபனே பண்ணாது போலருக்கு என்று கத்தினாள்.
இது எங்க தெரு கோயிலு.. எனக்கு எல்லாம் உரிமையும் உண்டு.. நீ வேற தெரு.. கிடைக்கறத வாங்கிட்டுப் போ.. உனக்கு சாமர்த்தியம் இல்லன்னா விடு.. என்றார்கள்.
நிறைய பேர் நாலைந்து தட்டுகள் கூடுதலாக வாங்கிப்போன பின்பு பிரசாதம் சீக்கிரம் தீர்ந்துவிட்டது.
அப்போது ஒரு வயதானவர் தடியை ஊன்றியபடி வந்து நின்றார்.
என்னப்பா என்றார் குருக்கள்.
ஐயா.. பசிக்குதுங்க.. சாமி பிரசாதம் கொஞ்சம் கொடுங்களேன்..
உடனே குருக்கள் கோயில் உள்ளே ஏம்மா..கௌரி பிரசாதம் ஏதும் இருக்கா? என்றார்.
இல்லிங்க சாமி.. தீந்துபோயிடிச்சி.. ஒருத்தங்க ஒன்னு வாங்குனா இருக்கும்.. நாலஞ்சு வாங்குனா என்ன பண்றது? கேட்டா கோவிச்சுக்கறாங்க.. உனக்கு என்ன வேலை.. கேட்கறதக் கொடுங்கறாங்க..
உள்ளே எனக்கு எடுத்து வச்சிங்களே அது இருக்காங்க பாருங்க என்றார் குருக்கள்.
அதையும் அந்த கடைக்காரம்மா எடுத்துட்டுப்போயிடிச்சு சாமி..
அடக்கடவுளே என்றார்..குருக்கள் பின் கோயிலின் உள்ளே போய் ஒரு தேங்காய் மூடியும் இரண்டு வாழைப்பழங்களையும் எடுத்து வந்து அந்த முதியவரிடம் கொடுத்தார்.
சாமி பிரசாம் இல்லீங்களா?
குருக்களுக்குக் கோபம் வந்துவிட்டது.. யோவ்..பெரியவரே.. இல்லங்கறதாலதான் இதக் கொடுத்தேன்.. என்றார்.
இல்ல சாமி.. இது பசிக்குப் போதாது சாமி.. கொஞ்சம் கைப்பிடிச்சோறு இருந்தா போதும் சாமி.. என்றார்.
நீ எங்கே இருந்து வர்றே என்று பேச்சை மாற்றினார் குருக்கள்.
நான் இங்கதான் துரோபதை கோயில்ல படுத்திருக்கேன் என்றார்.
சரி.. நாளைக்கு சீக்கிரம் வந்துடு.. பிரசாதம் தரேன் என்றார்.
வயதானவர் கேட்டார்.. நாளைக்கும் வரைக்கும் பசியைப் பொறுத்துக்கவா?