பிஹார் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
Sep 18 2025
84
புதுடெல்லி:
பிஹாரில் வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கல்விக் கடன்கள் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு அவர் இந்த சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வட்டி இல்லாததாக இருக்கும் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோன்று மாணவர்கள் கல்வி கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.2 லட்சம் வரை கல்வி கடன் பெற்ற மாணவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் இப்போது ஐந்து ஆண்டுகளாக இருக்கும் நிலையில் அது ஏழு ஆண்டுகளாக (84 மாத தவணைகள்) நீட்டிக்கப்படும்.
அதேபோன்று, ரூ.2 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்தும் காலம் ஏழு ஆண்டுகளிலில் இருந்து 10 ஆண்டுகளாக (120 மாத தவணைகள்) அதிகரிக்கப்படும். பிஹார் மாநிலத்தை பொறுத்தவரை அதிகமான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கமாக உள்ளது.
எனவே உயர்கல்விக்கான கல்விக் கடனில் வழங்கப்படும் இந்த சலுகைகள் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் என்பதுடன் அவர்கள் அதிக உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் உயர்கல்வியைத் தொடர உதவும்.
கல்வி வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கும், பிஹார் இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு படியாக இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. இது, அவர்களின் சொந்த எதிர்காலத்தை மட்டுமல்ல, மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது. இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.
உயர்கல்வி பயில ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. தற்போது இதற்கு, பொது விண்ணப்பதாரர்களுக்கு 4% வட்டியும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு வெறும் 1% வட்டியும் வசூலிக்கப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?