பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்
புதுடெல்லி, அக்.11-
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-–ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. குறிப்பாக கூட்டணிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. அந்தவகையில் மாநிலத்தில் புதிய அரசை அமைப்பது யார் என்பது தொடர்பாக ‘சி வோட்டர்’ நிறுவனம் மக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டு உள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்த வித்தியாசத்தில் முன்னேறி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த வகையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைக்க 40 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணிக்கு 38.3 சதவீத வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
புதிதாக களத்தில் இறங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சிக்கு 13.3 சதவீத வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கே அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்தவகையில் தேஜஸ்விக்கு 36.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவரை தொடர்ந்து பிரசாந்த் கிஷோருக்கு 23.2 சதவீதமும், தற்போதைய முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு 15.9 சதவீதமும், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுக்கு 8.8 சதவீதமும் ஆதரவு கிடைத்திருக்கிறது.
இதைப்போல பீகாரின் பிரச்சினைகளை தீர்க்கும் திறமை கொண்டதாக இந்தியா கூட்டணிக்கு 36.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 34.3 சதவீதமும், ஜன சுராஜ் கட்சி 12.8 சதவீதமும் ஆதரவு பெற்று உள்ளன.
இவ்வாறு வெவ்வேறு அம்சங்களில் இரு கூட்டணிகளும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து பெற்றிருக்கும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.