மேற்கு வங்கத்தில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - காவல் துறை விசாரணை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஒடிசாவின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மாணவி, பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், இரவு உணவு உட்கொள்வதற்காக தனது நண்பர் ஒருவருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர் பாலியல் வனகொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை அதிகாரி, "மருத்துவக் கல்லூரி மாணவி இரவு உணவு உட்கொள்ள தனது நண்பருடன் வெளியே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தற்போது அந்த மாணவி, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணையை தொடங்கி உள்ளோம்.
வெள்ளிக்கிழமை (அக்.10) இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் அந்த மாணவி தனது நண்பருடன் வெளியே சென்றது ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாத மூன்று ஆண்கள் அங்கு வந்தபோது உடன் வந்த நண்பர், மாணவியை தனியாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்த நபர்கள், மாணவியின் தொலைபேசியைப் பறித்துக் கொண்டு வளாகத்துக்கு வெளியே உள்ள ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் உடன் சென்ற அவரது நண்பரிடமும் பேசினோம். சிசிடிவி காட்சிகளைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம். ஆதாரங்களைச் சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் செல்வார்கள்" என தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது பெற்றோரையும் சந்திக்க தேசிய மகளிர் ஆணைய குழு துர்காபூர் செல்கிறது. "மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி, இணைந்து செயல்பட முன்வர வேண்டும்" என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.