பறிக்கப்படும் சமூக நீதி...’ - தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்

பறிக்கப்படும் சமூக நீதி...’ - தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்



புதுடெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளுக்குக்கூட சமூக நீதியைப் பறிக்கிறது என தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக இருந்தார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அம்னீத் பி குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உங்கள் கணவரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான புரன் குமார் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் முழு குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


புரன் குமாரின் மறைவு, அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளின் சமூக நீதியை இன்றளவும் பறிப்பதாகவே உள்ளது என்பதைக் காட்டுகிறது. நீதிக்கான இந்த பாதையில், நானும் லட்சக்கணக்கான நமது நாட்டு மக்களும் உங்களுடன் நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.


பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், 8 பக்க தற்கொலை குறிப்பை தட்டச்சு செய்து அதில் கையொப்பமிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 2020 முதல் ஹரியானாவின் சம்பந்தப்பட்ட அந்த மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து நடத்தப்படும் அப்பட்டமான சாதி அடிப்படையிலான பாகுபாடு, இலக்கு வைக்கப்பட்ட மன துன்புறுத்தல், பொது அவமானம் மற்றும் அட்டூழியங்கள் தாங்க முடியாதவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%