புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதார நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு
Oct 15 2025
10

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்கிர், பிலிப் அகியான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்கிர் (அமெரிக்கா), பிலிப் அகியான் (பிரான்ஸ்) மற்றும் பீட்டர் ஹோவிட் (இங்கிலாந்து) ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.
புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக, பரிசுத் தொகையில் 50% ஜோயலுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 50% பரிசுத் தொகை, படைப்பூக்க அழிப்பு மூலம் நீடித்த வளர்ச்சிக்கான கோட்பாட்டை உருவாக்கியதற்காக, பிலிப் அகியான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ராயல் ஸ்வீடிஷ் அகாடமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், வரலாற்றில் முதல் முறையாக உலகம் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்த ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள், தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு புதுமை எப்படி ஊக்கமாக செயல்படுகிறது என்பதை விளக்கி உள்ளனர்.
மனித வரலாற்றின் பெரும்பாலான காலத்தில் வளர்ச்சியைவிட, பொருளாதார மந்தநிலையே வழக்கமாக இருந்து வந்துள்ளது. தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எதிரான அச்சுறுத்தல்களை நாம் உணர்ந்து, அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன“ என கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?