சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, புல்மேடு பாதையில் தினமும், 1,000 பக்தர்களுக்கு மட்டுமே, 'ஸ்பாட் புக்கிங்' வழங்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அழுதை பாதையில் சிறப்பு பாஸ் வழங்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பை வழியாக சபரிமலை அய்யப்பன் கோவில் சென்று தரிசனம் செய்ய, 'ஆன்லைன்' முன்பதிவு கிடைக்காத தமிழக -- கேரள பக்தர்கள் புல்மேடு பாதையை தேர்வு செய்து வருகின்றனர்.
இதனால், இந்த பாதையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சிறுவர்கள் மற்றும் முதியவர்களை இந்த பாதையில் அழைத்து வருவது சிரமமாக உள்ளது. பல நேரங்களில், காட்டில் சிக்கியவர்களை மீட்டு வர தீயணைப்பு மற்றும் மத்திய அதிவிரைவுப்படை, பேரிடர் மீட்பு குழுவினர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது:
புல்மேடு பாதை செங்குத்தான ஏற்ற இறக்கம் என, 16 கி.மீ., துாரம் உள்ளது. எனவே வயது முதிர்ந்த மற்றும் சிறு வயது பக்தர்கள் இந்த பாதையில் வர வேண்டாம். இந்தப் பாதையில் இனி தினமும் 1,000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் கூப்பன் வழங்கப்படும்.
எருமேலியிலிருந்து அழுதை வழியாக வரும் பெருவழிப்பாதையில் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. சிறப்பு பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. இருப்பினும் கேரள உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?