பூந்தமல்லி பஸ் பணிமனையில் இருந்து 125 புதிய மின்சார பஸ்கள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கினார்
பூந்தமல்லி பஸ் பணிமனை மேம்படுத்தப்பட்ட மின்சார பஸ் பணிமனையாக மாற்றப்பட்டு, அங்கிருந்து ரூ.214.50 கோடி மதிப்பில் 125 புதிய மின்சார பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பஸ்களை இயக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பூந்தமல்லி பஸ் பணிமனை ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மின்சார பஸ் பணிமனையாக மாற்றப்பட்டது. இந்த பணிமனையில் உரிய கட்டிட உட்கட்டமைப்பு, பஸ்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கு 25 சார்ஜிங் பாய்ண்ட் அமைப்பு, பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாகக் கட்டிடம், பணியாளர்கள் ஓய்வறை, புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது.
பின்னர் ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பஸ்கள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் என 125 பஸ்களை பூந்தமல்லி பஸ் பணிமனையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய மின்சார பஸ் பணிமனை திறப்பு விழா மற்றும் 125 தாழ்தள மின்சார பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி பணிமனையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மின்சார பஸ் பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், மாநகர் போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் இராம.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?