பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கியில் இந்திய அணியை வீழ்த்தி சீனா ‘சாம்பியன்’

பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கியில் இந்திய அணியை வீழ்த்தி சீனா ‘சாம்பியன்’

ஹாங்சோவ், செப்.15-


11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான சீனா (3 வெற்றி) முதலிடமும், இந்தியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின.


முதல் நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர் கோல் அடித்து அசத்தினார். ஆனால் அந்த முன்னிலையை நீண்ட நேரம் தக்கவைக்க முடியவில்லை. 21-வது நிமிடத்தில் சீனாவின் ஜிக்சியா பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து தாக்குதல் பாணியை தீவிரப்படுத்திய சீன வீராங்கனைகள், இந்திய தற்காப்பு வளையத்தை உடைத்தெறிந்து வரிசையாக கோல்களை திணித்தனர். லி ஹாங் 41-வது நிமிடத்திலும், சோவ் மெய்ரோங் 51-வது நிமிடத்திலும், ஜியாகி ஜோங் 53-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இந்த வீழ்ச்சியில் இருந்துஇந்திய அணியால் மீள முடியவில்லை. முடிவில் சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து ‘சாம்பியன்’ பட்டத்தை தன்வசப்படுத்தியது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடைபோட்ட சீன அணி ஆசிய கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே கடந்த 1989, 2009-ம் ஆண்டுகளிலும் வென்று இருந்தது.அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மாதம் பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கும் சீனா நேரடியாக தகுதி பெற்றது. அந்த பொன்னான வாய்ப்பை இந்தியா நழுவ விட்டு விட்டது.


முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%