பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை புகார் எதிரொலி: மற்றொரு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது!
புதுடெல்லி: டெல்லி வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டகி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக மற்றொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பின் அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி முதன்முறையாக டெல்லி வந்துள்ளார். ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். இரண்டாவது நாள் நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பெண் செய்தியாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சைகள் கிளம்பி சமூகவலை தளங்களில் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் பதிவாகின.
இதன் மீது காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா வதோரா, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் விமர்சித்திருந்தனர். இதற்கு மத்திய அரசு ஆப்கன் செய்தியாளர் கூட்டத்தில் தமக்கு பங்கில்லை எனப் பதிலளித்திருந்தனர்.இந்நிலையில், நேற்று மற்றொரு பத்திரிகையாளர்கள் கூட்டத்தை ஆப்கன் அமைச்சர் முட்டகி நடத்தினார். ஆப்கன் கொடியுடன் அச்சந்திப்பு நடைபெற்றதில், பெண் செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெண் செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீதும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆப்கன் அமைச்சர் முத்தகி, ‘இது ஒரு தொழில்நுட்ப பிழை’ என்றும், பெண்களை வேண்டுமென்றே வெளியே வைத்திருக்கும் நோக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆப்கானிஸ்தானின் வெளியுறத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தகி கூறுகையில், ‘முந்தைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு தம்மால் தன்னிச்சையாக திட்டமிடப்பட்ட ஒன்று. தொழில்நுட்பக் கோளாறு காரணமானது.தவிர, இதில் பாலினப் பாகுபாடு செய்யும் நோக்கம் எதுவும் இல்லை. மிகவும் குறுகிய நேரத்தில் முடிவானக் கூட்டத்தில் குறிப்பிட்ட பத்திரிகைகள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.’ என விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூரிலுள்ள பழம்பெருமை வாய்ந்த தாரூல் உலூம் தியோபந்த் மதரஸாவிற்கு விஜயம் செய்தார் அமைச்சர் அமீர்கான். அங்குள்ள மவுலானாக்களும் மாணவர்களும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆக்ராவின் தாஜ்மகாலையும் பார்வையிட அமைச்சர் முட்டகி திட்டமிட்டிருந்தார். ஆனால், ஏதோ சில காரணங்களால் ஆக்ரா விஜயம் திடீர் என ரத்தாகிவிட்டது.