பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளிடம் டெபாசிட்: விதிமுறைகள் வகுக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளிடம் டெபாசிட்: விதிமுறைகள் வகுக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

சென்னை:

பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முன், அரசியல் கட்சிகளிடம் முன்வைப்பு தொகை வசூலிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்க, அக்.16-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து, அனுமதி வழங்க காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, தவெக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற நிகழ்வுகளில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்த பின் அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகளை வகுப்பது குறித்து பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முன்கூட்டியே டெபாசிட் வசூலிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என உதவி ஐஜி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


மேலும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெறும் முன் டெபாசிட் வசூலிக்க எந்த சட்டமும் வழிவகை செய்யவில்லை. சம்பவம் நடந்த பிறகு தான் இழப்பீடு வசூலிக்க முடியும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.


அவகாசம் கோரி டிஜிபி மனுத்தாக்கல் செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுவரை எத்தனை வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.


மேலும், முன் வைப்புத் தொகை வசூலிக்க சட்ட விதிகள் ஏதும் தேவையில்லை.மனமிருந்தால் போதும் எனத் தெரிவித்த நீதிபதி, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் முன், வருவாய் கோட்டாட்சியரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தக் கூறலாம். நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பப் பெறலாம். ஏதேனும் சேதம் வந்தால் அந்த தொகை மூலம் இழப்பீடு வழங்கலாம் என்றார்.


பின்னர், இந்த வழக்கில் தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும் தாமாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதி, முன் வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%