சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
Sep 26 2025
30

புதுடெல்லி:
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத், ‘இது தொடர்பாக சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் எங்கும் மன்னிப்பு கோரவில்லை’ என்றார். அதற்கு, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘கடந்த முறை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும்கூட சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘இருவரும் தங்களது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று பரஸ்பரம் மன்னிப்புக் கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீமானும், விஜயலட்சுமியும் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்தப் பேட்டியும் தரக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?