மகுடம் சூட்டும் உலகு

மகுடம் சூட்டும் உலகு


எல்லாம் முடியும் என்பவனே...

என்னினிய இளைஞனே!

நேற்றைய இளமை தான் 

இன்றைய முதுமை என்றுணர்ந்தாலே போதும்... 

நாளைய முதுமை 

நீ தானென்று நச்சென்று ஓங்கி ஒலித்து 

உள்ளெலும்பெல்லாம் ஒடுங்கி நடுங்கி 

உள்ஞானம் பேரொளியாய் 

விழிக்கும்...

முடியாமல் தவிக்கும் 

முதியோரைப் பார்த்து 

நக்கல் நையாண்டி 

கிண்டல் கேலி

எள்ளல் ஏளனம் எதுவும் 

இதய நரம்பில் கூட மறந்தும் 

எட்டிப் பார்க்காது எப்போதும்...!

உள்ளத்தின் ஊற்றுக்கண் யாவும் 

உதவும் கரங்களாய் மாறும்...

என்னினிய இளைஞனே...

அனுபவச் செழுமையில் 

அறிவின் உச்சம் அடைந்து 

அகிலத்தின் கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்து

காலமெல்லாம்

காக்கும் கடவுள் அன்றோ

கனிந்த முதியோர்!

பெற்று வளர்த்து 

ஆளாக்கிய

பெருமைமிகு பெற்றோருக்கு 

பணிவிடை செய்யப் பயந்து 

பண்பாடு மறந்து துறந்து 

பளபளக்கும் பகட்டாய் 

பகல் நிலவாய் பாலையாய் காயும் 

காப்பகத்தில் கொண்டு போய் நிறுத்தி 

களங்கம் சேர்க்காதே

கர்மாவின் கோபம் வாங்காதே...

கடல் தாண்டிப் பறந்து போய் சமயோசிதம் பேணி நீ

கோடி கோடியாய் 

சம்பாதித்து நிமிர்ந்தாலும்

பெற்றோரைப் பேணி

புண்ணியம் பெற்றிடத் 

தவறி விட்டால் 

வளம் கூடிய வாழ்வே ஆனாலும் 

உலகத்தார் பார்வையில் 

வடுப்பட்டதாகி விடும்.

ஆகவே இளைஞனே!

மண்ணுக்கு அடியில் 

மறைந்து உறைந்து

ஆணிவேராய் இருந்தாலும் 

ஆயுள் முழுவதும் 

ஆனந்தம் தந்தருளும் 

அருமைப் பெற்றோரை

அனுதினமும் பணிந்து 

அன்பை ஆதரவாய்ப் 

பொழிந்து பூரணமாகு..

உற்ற வீடு மட்டுமல்ல 

மற்ற வீட்டுப் பெரியோரையும்

மதித்து வாழப் பழகு 

மனதால் உனக்கு 

மகுடம் சூட்டும் உலகு!


நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%