மதுப்பழக்கமும், போதை கலாசாரமும் கொடூர குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன - வைகோ

மதுப்பழக்கமும், போதை கலாசாரமும் கொடூர குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன - வைகோ


கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-


“கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு பயின்று வரும் மதுரையைச் சேர்ந்த மாணவி நேற்று இரவு கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மூன்று வாலிபர்கள் காரில் இருந்த இளைஞரை தாக்கிவிட்டு மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய இளைஞர் மயக்கம் தெளிந்து விடியற்காலை 3 மணிக்கு காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர்.


காவல்துறையினர் தொடர்ந்து தேடியபோது அந்த மாணவி அங்கிருந்த முட்புதரில் அலங்கோலமாக உயிருக்குப் போராடிய நிலையில் துடித்ததைப் பார்த்துள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியையும் தாங்கொணாத் துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் தனிப்படை மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் என்ற தகவல் வந்துள்ளது. உடனடியாக அவர்களை கண்டுபிடித்து தக்க சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மதுப்பழக்கமும், போதை கலாசாரமும் இத்தகைய கொடூர குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இதில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது என்பதை கோவையில் நடந்துள்ள கொடூர நிகழ்வு உணர்த்துகிறது.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%