மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘பஸ் பர்ஸ்ட்' பிரச்சாரம்: உதயநிதி துவக்கி வைத்தார்
சென்னை அண்ணா சதுக்கம் பஸ் முனையத்தில், மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கு முன்னுரிமைக்கான ‘பஸ் பர்ஸ்ட்' என்ற பிரச்சாரத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் பொதுப்பஸ்களை முன்னிலைப்படுத்தி, பொது மக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கான முன்னுரிமை ‘பஸ் பர்ஸ்ட்' பிரச்சாரத்தில் சிறப்பு அம்சங்களான குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைதல், தடைகள் மற்றும் நெரிசல் அற்ற பஸ் பயணம், குறைந்த உமிழ்வு போன்ற பஸ் சார்ந்த இயக்கத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் ஒரு முயற்சி ஆகும்.
அதே நேரத்தில், அனைத்து வழித்தடங்களிலும் மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்கள் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், "சென்னை தினம்" கொண்டாட்டத்தின் அங்கமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, அனைவருக்குமான கவிதைப் போட்டி, புகைப்படப் போட்டி மற்றும் புதையல் வேட்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
1972–ம் ஆண்டு நிறுவப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி), இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில், விரிவான பேருந்து வலையமைப்பு மூலம் தினந்தோறும் சுமார் 34.10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது. சென்னை மக்களின் தேவைக்கு ஏற்ப முழுமையான நகர்ப்புற பேருந்துகள் இயக்கத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைத்து வழித்தடங்களிலும் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற இந்த முயற்சியின் மூலம், பொது மக்கள் பைக், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களை தவிர்த்து பொதுப்போக்குவரத்தை பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளவதன் மூலம் ஊக்குவிப்பதையும், தூய்மையான, பாதுகாப்பான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், காவல் கூடுதல் ஆணையர் இ.கார்த்திகேயன், துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி, மண்டல குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் இராம.சுந்தரபாண்டியன், உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.