பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்னை என்பது தலைமுறை தாண்டித் தொடரும் பெருநோய். 2008, 2009, 2012, 2014, 2021 ஆண்டுகளில் வைரஸ் சீசன் பாதிப்புகள் போலத் தொடர்ந்தன தாக்குதல்கள். அக்டோபர் 7, 2023ல் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலோடு மீண்டும் உயிர் பெற்ற போர் தான் மிக நீண்டகாலப் போராக அமைந்து விட்டது. இருதரப்பிலும் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் பலியாகின. லட்சக்கணக்கில் மக்கள் காயமுற்றனர். ஊனமுற்றனர். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டிடங்கள், வணிகத் தளங்கள், குடியிருப்புக் கட்டிடங்கள் தரை மட்டமாயின. இந்த நீண்டகாலப் போர் விளைவித்த நாசம் மிக ப்ரம்மாண்டம். கட்டிட இடிபாடுகளை அகற்றி காஸா நகரை சுத்தம் செய்யவே பத்து ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. உலகின் ஒரு பகுதியில் போர் மூள்கிறது என்றால் அங்கே மரணத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன என்றே அர்த்தம்.
அரிவாள், கத்தி,கம்பு, ஈட்டி, வாள், வேல்கம்பு, வில், அம்பு மூலம் போர்கள் நிகழ்த்தப்பட்ட காலம் மாறிவிட்டது. இன்று துப்பாக்கி, வெடிமருந்து, எறிகுண்டு, ஜெலட்டின், ஆர். டி. எக்ஸ்., ஏவுகணை, அணுகுண்டு, ட்ரோன், சைபர் தளவாடங்கள் என கொலைக்கருவிகள் பரிமாண வளர்ச்சி பெற்றுவிட்டன. போருக்கான சில மரபுகளை வகுத்துக் கொண்டு போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று மோதும் நெஞ்சுரம் இன்று போதாது. இன்று நடப்பது தொழில்நுட்ப அறிவுத்தளத்தில் அரங்கேறும் போர் அராஜகம். இன்று நடைபெறுவது மனிதன் எதிர் மனிதன் போரல்ல. மாறாக மரபுகள் எதுவுமற்ற தளவாடம் எதிர் தளவாடம் எனும் போர்.
நிராயுதபாணியான எதிரிக்கு எதிராக ஆயுதம் எடுப்பதில்லை என்பது இந்தியப் போர் மரபு. அந்த மரபு அன்றைய போர்களில் போற்றப்பட்டது. மகாபாரதம் அதைத்தான் சித்தரித்தது. அர்ஜுனனின் மகன் அபிமன்யு. பீஷமப் பிதாமகர் அபிமன்யுவிற்கு எதிராக ஆயுதம் எடுக்க மறுக்கிறார். அவன் பெயரன் என்பதற்காக அல்ல. அவன் முதிரா இளைஞன் என்பதால். அவன் ஆயுதம் தரித்திருந்தாலும் அவனை நிராயுதபாணியாகவே பீஷமர் கருதினார் அவன் முதிரா இளைஞன் என்பதால். எளிய, வறிய, ஆயுதம் ஏதுமற்ற ஆழ்கடல் தமிழ் மீனவனுக்கு இன்றும் அராஜக, மரபு மீறல்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வெறிகொண்டு எழுந்த கண்ணகியை சிலம்பு காட்டுகிறது. அவளின் ஆற்றாத துயரத்திலும் அழிவுக்குக்கூட சில உயரிய மரபுகளை அவள் வழியாக இளங்கோ நமக்கு நிறுவுகிறார். அதாவது
" பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தார், குழவி எனும் இவரைக் கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்க"
என்று அக்கினித் தெய்வத்திற்கு ஆணையிடுகிறாள் கண்ணகி. இதுவே உயரிய விழுமியங்கள் காட்டும் மரபு.
ஆனால் மக்கள் காஸாவில் கொத்துக் கொத்தாகச் சாகிறார்கள். மக்களைப் பட்டினி போட்டுக் கொல்வதுவும் ஒரு போர்த் தந்திரமாக (war strategy) அரங்கேறுகிறது. பிச்சைப் பாத்திரம் ஏந்திய காஸா நகர சிறுவர், சிறுமியர் ஒரு ரொட்டித் துண்டுக்காக ஒருவரை ஒருவர் நெருக்கி, அடித்துக் கொள்கிறார்கள். அது கல்லையும் கரைந்துருகச் செய்யும் கண்றாவிக் காட்சி. எனவே போரில்லா உலகம் வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.
ஒருவழியாக 09.10.2025 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரேன் - ரஷ்யா போரும் விரைவில் முடிவுக்கு வரவும், நிரந்தர உலக அமைதி நீடிக்கவும், பேரன்பின் ஆட்சி அகிலத்தை அழகுறுத்தவும் பெருங்கருணைப் ப்ரம்மத்தைப் பிரார்த்திப்போம். நல்லதே நடக்கட்டும். அது அப்படியே ஆகுக!!
P. கணபதி
பாளையங்கோட்டை.